உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் ஆறாவது முறையாக ஜூலை 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள், தொழில் முனைவோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதன் தொடர்ச்சியாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களிடம் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக மத்திய அரசு உலக வங்கியிடம் கடன் கோரியிருந்தது.
கரோனா நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு, உதவி செய்யும் வகையில் 750 மில்லியன் அமெரிக்க டாலர் எம்எஸ்எம்இ அவசரகால திட்டத்திற்கு உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது" என்று உலக வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.