ஒபிசிட்டி எனப்படும் உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்னையாக தற்போது கருதப்படுகிறது. பல சுகாதார அமைப்புகள் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முனைப்பில் பணியாற்றிவருகின்றன. உடல் பருமன் தீவிரமான நோயாக கருதப்படுவதற்கான மற்றொரு முக்கியக் காரணம் - இது நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம் போன்ற பிற நோய்களுக்கு வழிவகுக்கிறது. எனவே, இதைக் கருத்தில் கொண்டு, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த சர்வதேச உடல் பருமன் எதிர்ப்பு தினமாக நவம்பர் 26ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆண்டுதோறும் உடல் பருமன் பிரச்னையால் 2.8 மில்லியன் நபர்கள் உயிரிழக்கின்றனர். அதே சமயம், உலகின் மிகக் குறைவான பருமன் பாதிப்புக்குள்ளான நாடாக வியட்நாம் கருதப்படுகிறது. இங்கு 2.1 விழுக்காடு மக்கள் மட்டுமே கொழுப்பு உள்ளவர்களாக கருதப்படுகிறது.
தற்போது, நாம் தொற்றுநோயுடன் போராடிக்கொண்டிருப்பதால், வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். காலை முதல் மாலை வரை கணினி முன்னால் அமர்ந்தபடியே உணவு உட்கொள்வது, பலருக்கு கடுமையான எடையை அதிகரிக்க வழிவகுக்கிறது.
இதுமட்டுமின்றி, கரோனா தொற்று மீதான அச்சத்தின் காரணமாக, தங்களது அன்றாட வாழ்க்கையை நான்கு சுவர்களுக்குள் முடித்துக்கொள்கின்றனர். ஊரடங்கிற்குப் பிறகு, பெரும்பாலானோர் எடை கூடியுள்ளது அல்லது தொப்பை உருவாகியுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இப்பிரச்சினை குழந்தைகள், இளைஞர்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.
உடல் பருமன் காரணங்கள்:
- மரபியல் பிரச்சினை
- ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம்
- ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை
- தூக்கமின்மை
- உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை
- மருந்துகள்
- சுகாதாரப் பிரச்சினைகள்
உடல் பருமன் தடுக்கும் முறைகள்:
ஆரோக்கியமான உணவு
ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், பானங்கள் அல்லது எண்ணெய்யில் வறுத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். என்றாவது ஒருநாள் சாப்பிடுவது தவறில்லை. ஆனால், அத்தகைய உணவுகளை உட்கொள்ளும்போது அளவை கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். சிப்ஸ், பிஸ்கட், குக்கீகள் போன்றவற்றுக்குப் பதிலாக ஆரோக்கியமான தின்பண்டங்களைச் சாப்பிட வேண்டும். வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்வது நல்லது.
உடற்பயிற்சி அவசியம்
30-45 நிமிடங்கள் தினசரி பயிற்சி மிகவும் முக்கியமானது. உடற்பயிற்சி மையங்களுக்குச் செல்ல முடியாவிட்டாலும், வீட்டிலிருந்தபடியே யோகா, ஏரோபிக்ஸ், ஜம்பிங், ஸ்கிப்பிங், சிறிய உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.