தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 23, 2020, 9:00 PM IST

ETV Bharat / bharat

“ஜம்மு காஷ்மீரின் கொடியை உயர்த்த அனுமதிக்கும் வரை, வேறு எந்த கொடியையும் பிடிக்க மாட்டோம்”- மெகபூபா முஃப்தி!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கொடியை உயர்த்த அனுமதிக்கும் வரை, வேறு எந்த கொடியையும் பிடிக்க மாட்டோம் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி கூறியுள்ளார்.

காஷ்மீரின் கொடியை தவிர வேறு எந்த கொடியையும் இனி பிடிக்க மாட்டோம்!
காஷ்மீரின் கொடியை தவிர வேறு எந்த கொடியையும் இனி பிடிக்க மாட்டோம்!

2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதியன்று ஜம்மு -காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் நீக்கம் செய்யப்பட்டது. அத்துடன், அம்மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு அறிவித்தது.

இதற்கு எழும் எதிர்ப்புகளை சமாளிக்க கூட்டம் கூட தடை விதிப்பது, இராணுவத்தை இறக்கி பாதுகாப்பை வலுப்படுத்துவது, இணையதள சேவை & மொபைல் சேவைகளைத் தடை செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.

மேலும், ஜம்மு-காஷ்மீரின் நூற்றுக்கணக்கான முக்கிய அரசியல் தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு தடுப்புக்காவலில் வீட்டுச் சிறைகளில் அடைத்தது.

தொடர்ந்து கடந்த 14 மாதங்களுக்கும் மேலாக வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மெஹ்பூபா முப்தி கடுமையான சட்டப்போராட்டத்திற்கு பின்னர் கடந்த 14ஆம் தேதியன்று விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "என் கொடி இதுதான். மேஜையில் வைக்கப்பட்டிருந்த இந்த ஜம்மு-காஷ்மீர் கொடி எங்களிடம் மீண்டும் அளிக்கப்பட்டால் தான் நாங்கள் அந்த மூவர்ணக் கொடியை ஏற்றுவோம்.

எங்கள் கொடியை மீண்டும் அளிக்காமல், வேறு எந்த கொடியை தந்தாலும் நாங்கள் அதனை உயர்த்திப் பிடிக்க போவதில்லை. இந்தக் கொடிதான் மூவர்ணக்கொடியுடனான எங்களது உறவை வளர்த்தெடுத்தது.

இந்த நாட்டின் மூவர்ணக்கொடியுடனான எங்களது உறவானது, எங்களது ஜம்மு - காஷ்மீர் கொடியைத் தவிர்த்து தான் தொடர வேண்டுமென்றால் அதற்கு வாய்ப்பில்லை. இந்தக் கொடி எங்கள் கைக்கு வரும்போது தான் அந்தக் கொடியையும் உயர்த்துவோம்.

நான் போராட்டக்குணம் உடையவள். எனக்குத் தேர்தல், பதவிகளில் எந்த ஆர்வமும் இல்லை. எங்கள் சிறப்பு அந்தஸ்து மீண்டும் எங்களுக்கு கிடைக்கும் வரை தேர்தலில் போட்டியிட மாட்டேன். சிறப்பு உரிமையை மீட்பதல்ல என் அரசியல். காஷ்மீர் பிரச்னையைத் தீர்ப்பது ஒன்றே என் போராட்டம்.

சுதந்திர, ஜனநாயக, மதச்சார்பற்ற இந்தியாவுடன் தான் எங்களுக்கு இணக்கம். இன்றைய இந்தியாவுடன் நாங்கள் நலமுடன் இல்லை" என்றார்.

இந்த சந்திப்பின்போது அக்கட்சியின் மூத்த தலைவர்களான அப்துல் ரஹ்மான் வீரி, குலாம் நபி லோன் ஹஞ்சுரா மற்றும் சுஹைல் புகாரி ஆகியோர் உடனிருந்தனர்.

ABOUT THE AUTHOR

...view details