இன்று உலகம் முழுவதும் பெண்கள் தினம் கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சாதாரண நிலையிலிருந்து சாதனையாளராக மாறிய ஏழு பெண்கள் குறித்து தகவல்களை பதிவிட்டுவருகிறார்.
அதில் முதல் பெண்ணாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சினேகா மோகன்தாஸ் என்பவர் குறித்த தகவல்களை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னையைச் சேர்ந்த 23 வயதே ஆகும் சினேகா, தற்போது விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவருகிறார்.
படிக்கும்போது ஃபுட்பாங்க் இந்தியா (FoodBank-India) என்ற அமைப்பை நடத்திவருகிறார். தனது தன்குறிப்பு வீடியோவில், "ஏழைகளுக்கு சிறப்பான வாழ்கையைப் படைப்பதற்கான நேரம் இது. வீடற்றவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பதை நான் எனது தாயிடமிருந்து கற்றுக்கொண்டேன்.
அதனால்தான் இந்த அமைப்பை தொடங்கினேன். வெளிநாட்டிலுள்ளவர்களின் உதவியுடன் இதைச் செய்துவருகிறேன். நான் எனக்கு பிடித்ததை செய்யும்போது முழு திருப்தியடைகிறேன். எனது சக குடிமக்கள், குறிப்பாக பெண்கள் முன் வந்து என்னுடன் கைகோர்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
பசித்தவர் என்று யாரும் இல்லாத உலகை படைக்க நாம் பாடுபட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட மாளவிகா ஐயர், காஷ்மீரைச் சேர்ந்த ஆரிஃபா, தண்ணீர் குறித்து விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திவரும் கல்பனா, பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த விஜயா பவார் ஆகியோர் குறித்த தகவல்களையும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நமக்குத் தேவை சிங்கப் பெண்கள் அல்ல... புரட்சிப் பெண்கள்!