ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த காவல் துறை பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
தமிழ்நாடு பெண்கள் பாதுகாப்பு குறித்த சில புள்ளவிவரங்களைக் கீழே காண்போம்.
2016ஆம் ஆண்டு மட்டும் பெண்களுக்கு எதிராக 4463 குற்றங்கள் நடந்திருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு, 5397 குற்றங்கள் நடந்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஒரே ஆண்டில் 934 குற்றங்கள் அதிகரித்துள்ளன.
நேதா செயலி
நேதா செயலி மூலம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு நவம்பர் 20ஆம் தேதி வெளியிடப்பட்டது. பாதுகாப்பாக இல்லை என 26 விழுக்காடு பெண்கள் கணக்கெடுப்பில் தெரிவித்துள்ளனர். 22 மாநிலங்களில் லட்சம் பெண்களிடம் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 38 விழுக்காடு பெண்கள், தங்களின் பாதுகாப்பு சமரசமாக்கப்பட்ட நிகழ்வு நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை ஆய்வறிக்கை
குற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் மங்கை நடராஜன், பாலியல் வன்கொடுமை குறித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் பாலியல் ரீதியான சீண்டல்கள் மாலை நேரங்களில்தான் அதிக அளவில் நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார். "பெண்கள் தனியாக பணிக்குச் செல்லும்போதும் பேருந்து நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் ஆகிய இடங்களில் அவர்கள் நிற்கும்போதும் பாலியல் ரீதியான வன்கொடுமைகள் நடைபெறுகின்றன" என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் மூன்றாண்டுகளுக்கு முன்பு சுவாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். பொது போக்குவரத்தை தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு எதிராகத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.
2017ஆம் ஆண்டு, சென்னையைச் சேர்ந்த 1500 பெண்களிடம் சிட்டி என்ற அரசு சாரா அமைப்பு கணக்கெடுப்பு எடுத்தது. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும்போதுதான் பெரும்பாலான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை சந்திப்பதாக 70 விழுக்காடு பெண்கள் தெரிவித்துள்ளனர். ரயில், ஆட்டோ, ஷேர் ஆட்டோ ஆகியவற்றில் பயணிக்கும்போதும் பாலியல் வன்கொடுகள் நிகழ்த்தப்படுவதாக பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பெண்களின் பாதுகாப்பு?
- 2017ஆம் ஆண்டு, கல்லூரி வளாகங்களில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 50 விழுக்காடு அதிகரித்துள்ளதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- 2015ஆம் ஆண்டு, பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவது கட்டாயமாக்கப்படுகிறது என மாநில கல்வித் துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தனியார் பள்ளிகள் இதனை நிறைவேற்றியபோதிலும் அரசுப் பள்ளிகள் இதனை மேற்கொள்ளவில்லை.
- 2019ஆம் ஆண்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,894 பள்ளிகளில் 21.71 கோடி ரூபாய் செலவில் சிசிடிவி பொருத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால், இந்தத் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
நிர்பயா நிதி
- 2013ஆம் ஆண்டு டெல்லியில் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணை நினைவுகூரும் வகையில் நிர்பயா நிதி உருவாக்கப்பட்டது.
- ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு 1000 கோடி ரூபாய் நிதியை பெண்களின் பாதுகாப்புக்காக மாநில அரசுகளுக்கு ஒதுக்குகிறது.
- இதுவரை, 190.68 கோடி ரூபாய் நிதியை தமிழ்நாடு பெற்றுள்ளது. ஆனால், ஆறு கோடி ரூபாய் நிதியை மட்டுமே பயன்படுத்தியுள்ளது.
மாநில அரசுகள் விடுத்த கோரிக்கை
- பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.
- அரசுப் பேருந்துகளில் அவசர பொத்தானை இணைக்க வேண்டும்.
- பெண்கள் காவல் நிலையத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குற்றம் அதிகம் நடக்கும் இடங்களைக் கண்டறிந்து, அவசர அழைப்பு சேவைக்கான நிலையங்களை அங்கு தொடங்க வேண்டும்.
- பெண்களுக்காக 500 மின்னணு கழிவறைகளை பொது இடங்களில் அமைக்க வேண்டும்.
- 7,000 எல்இடி தெருவிளக்குகளைப் பொருத்த வேண்டும்.
செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்
- பெண்கள் அவசர உதவி எண் 181
- அனைத்து காவல் நிலையங்களுக்கும் அம்மா ரோந்து வாகனம்.
- காவலன் செயலி