உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இன்று அம்மாவட்ட காவல்துறை தலைமையாகத்திற்கு இன்று காலை வந்திருந்தார். கையில் மண்ணெண்ணெய் கேனுடன் இருந்த அவர் திடீரென அதனை தன் மீது ஊற்றிக்கொண்டு, தீக்குளிக்க முயன்றார்.
இதனையடுத்து, அவரை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரது உயிரைக் காப்பாற்றினர்.
இது தொடர்பாக அந்த இளம்பெண் கூறுகையில், "காஸியாபாத்தைச் சேர்ந்த மூவர் என்னை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு புரிந்தனர்.
கொலை உயிரும் குற்றுயிருமாக கிடந்த தன்னை சிலர் மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர். அப்போது என்னிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின்போது எனக்கு நிகழ்ந்த கொடுமைகளை வாக்குமூலமாக கூறினேன். ஆனால், இதுவரை அந்த மூவர் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
காவல்துறையினர் பெயருக்கு அதில் ஒருவரை மட்டும் வேறு சில வழக்கு பிரிவுகளில் கைது செய்துள்ளனர். மீதமுள்ள இருவரும் இப்போதும் சுதந்திரமாக வெளியே சுற்றி வருகின்றனர்.
அவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது. அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள மறுக்கும் காவல்துறையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறையை அம்பலப்படுத்தவும், அவர்களது செயலற்ற தன்மையை எதிர்க்கவும் நான் தீக்குளிக்க முயன்றேன்" என்றார்.
இளம்பெண் தொடர்பில் காவல்துறை அலுவலர்கள் கூறுகையில்," தன் மீது தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற அந்த பெண்ணிடம், பெண் காவலர்கள் விசாரணை செய்துவருகின்றனர். அவரது குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, வழக்கு குறித்த காவல்துறையினரின் அறிக்கைகள் பெற்று சரிபார்த்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினர்.