பிகார் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. சுமார் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெள்ளப்பெருக்கை சமாளிக்க 21 என்.டி.ஆர்.எஃப் குழுவினர் வெவ்வேறு மாவட்டங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கிழக்கு சம்பாரன் மாவட்டத்தின் கோபாரி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், 25 வயதான கர்ப்பிணி சிக்கியுள்ளதாக மீட்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் விரைந்த மீட்பு படையினர், பத்திரமாக கர்ப்பிணியை படகில் ஏற்றினர். அப்போது, திடீரென்று அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், மீட்பு படையினர் உதவியால் படகிலே பெண் குழந்தை பிறந்துள்ளது. மீட்பு படையுடன் ஆஷா குழுவினரும் இருந்ததால் பிரசவத்திற்கு உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது.