நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 8 நாள்களாக தொடர்ச்சியாக கரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. வைரஸ் தடுப்புப் பணியில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக களமிறங்கியுள்ளன. நூற்றுக்கணக்கான மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன.
இந்தியாவில் 20 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!
டெல்லி: கடந்த 8 நாள்களாக தொடர்ச்சியாக கரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைத் தாண்டி வருகிறது. நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நேற்று (ஆகஸ்ட் 5) மட்டும் 56 ஆயிரத்து 282 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மொத்தமாக 19 லட்சத்து 64 ஆயிரத்து 536 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 28 ஆயிரத்து 336ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடன் ஒப்பிடுகையில் 67.7 விழுக்காடு மக்கள் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரத்து 699ஆக உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த எட்டு நாள்களாக தினந்தோறும் சுமார் 50 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே வேகத்தில் சென்றால், நாட்டில் கரோனா பாதிப்பு விரைவில் 20 லட்சத்தை தாண்டிவிடும் எனக் கூறப்படுகிறது. அதிகபட்சமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 68 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு 2 லட்சத்து 73 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.