இந்திய-சீன எல்லைப் பகுதியில் தொடர்ந்து போர்ப் பதற்றம் நீடித்துவருகிறது. இரு நாடுகளும் மாறிமாறி பரஸ்பரம் குற்றஞ்சாட்டிவருகின்றன. இச்சூழலில், நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி லடாக் பகுதிக்குச் சென்று கள நிலவரங்களை ஆய்வுசெய்தார்.
பின்னர், எல்லையிலுள்ள வீரர்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், ”சீனாவை மறைமுகமாகத் தாக்கிய அவர், எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு செய்யும் காலம் எல்லாம் தற்போது மலையேறிப்போகிவிட்டது. இது வளர்ச்சிக்கான காலம். ஆக்கிரமிப்பு சக்திகள் தோல்வியே சந்தித்துள்ளன என்பதை வரலாறு நிரூபித்துள்ளது. லே, லடாக் தொடங்கி சியாச்சின், கார்கில், கல்வான் என எல்லையின் அனைத்துப் பகுதிகளிலும் இந்திய வீரர்களின் வீரம் பறைசாற்றப்பட்டுள்ளது” என்றார்.
இதிலிருந்து எல்லைப் பதற்றம் குறித்து பிரதமர் ஒரு வலுவான நிலைப்பாட்டை வீரர்களுக்கு அளிக்க நினைத்துள்ளது புலப்படுகிறது. இருந்தபோதிலும், தற்போது பலர் மத்தியில் ஒரு எண்ணம் எழுந்திருக்கிறது. நீண்ட நாள்களாக இந்தியாவின் மாநிலங்களுள் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தை சீனா தன்வசமாக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டுவருகிறது.
இந்திய-சீன எல்லைப் பகுதியிலுள்ள லடாக் முழுவதும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதி உள்ளது போல, திபெத்துக்கும் வடகிழக்கு இந்தியாவிற்கும் இடையிலான எல்லையை வரையறுக்கும் மெக்மோகன் எல்லைக்கோடு உள்ளது. இந்தக் கோடு 1914ஆம் ஆண்டு ஆங்கிலேய புவியியலாளரான ஹென்றி மெக்மோகனால் வரையறுக்கப்பட்டது. இதனை இந்தியாவும் திபெத்தும் ஒப்புக்கொண்டன. ஆயினும், சீனா இந்த மெக்மோகன் எல்லைக்கோடை ஏற்க மறுத்து, அருணாச்சலப் பிரதேசத்தில் 65 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவிலான நிலத்தை உரிமை கோருகிறது.
1959ஆம் ஆண்டு சீனப் பிரதமர் சௌஎன் லாய், இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தில், சீனாவின் திபெத்திய பிராந்தியத்திற்கு எதிரான ஆக்கிரமிப்புக் கொள்கையின் ஒரு தயாரிப்பே மெக்மோகன் எல்லைக்கோடு எனவும், எல்லைக் கோடுகளை முறையாக வரையறுக்க எந்த ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், இந்திய-சீன எல்லையாக உள்ள திபெத் ஒரு இறையாண்மை கொண்ட நாடு அல்ல எனவும் விமர்சித்திருந்தார்.