அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 36 மணி நேர பயணமாக இந்தியா வருகிறார். அதிபரான பின்பு டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் கன்னி பயணம் இதுவாகும்.
டொனால்ட் ட்ரம்புடன் அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா அவரது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினரும் இந்தியா வருகின்றனர். குஜராத் வந்திறங்கும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதன் பின்னர் விமான நிலையத்திலிருந்து 22 கிலோமீட்டர் சாலை வழியாக ட்ரம்ப் பயணிக்கிறார். அவர் பயணிக்கும் சாலை ஓரங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு, அங்கு கலாசார நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டுவந்து வரவேற்பளிக்கின்றனர்.
இந்த நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிகள் மாலை 3.30 மணியோடு நிறைவுபெறுகிறது. இதையடுத்து விமானம் வழியாக ட்ரம்ப் தனது குடும்பத்தினருடன் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவிற்குச் செல்கிறார். அங்கு காதலின் சின்னமான தாஜ்மஹாலை அவர் கண்டு ரசிக்கிறார். அங்கு அவர் புகைப்படம் எடுத்துகொள்கிறார்.
இதையடுத்து டெல்லி சாணக்யாபுரி உணவக விடுதியில் தங்குகிறார். அவருக்கான உணவு ஐடிசி மயூரியா புஹாரா என்ற உயர்தர உணவகத்தில் தயாராகிவருகிறது. டொனால்ட் ட்ரம்ப் செயல்களில் மட்டுமல்ல உணவுகளிலும் வித்தியாசமான கொள்கையை கடைப்பிடிப்பவர். அவருக்கு காலையில் உணவு சாப்பிடுவது பிடிக்காது.
அதற்குப் பதிலாக டயட் கோக் அருந்துவார். அசைவ உணவுகளில் அவருக்கு வெண்பன்றி இறைச்சி, முட்டை பிடிக்கும். இதுதவிர பால் சார்ந்த உணவுப் பொருள்களையும் அவர் எடுத்துக் கொள்கிறார். இனிப்பு வகைகளும் அவருக்கு வழங்கப்படுகிறது.
குஜராத்தில் அவருக்கு குஜராத் தேநீர், குளிர் தேநீர், க்ரீன் டீ, குஜராத் வகை உணவுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஐரோப்பிய நாட்டில் பிறந்தாலும் ட்ரம்புக்கு மதுவின் வாடைகூட பிடிக்காது. மருந்துக்குக்கூட அவர் மது அருந்தமாட்டார்.
மது அருந்தும் 'குடி'மகன்களையும் அவருக்குப் பிடிக்காது. தனது பல பேட்டிகளில்கூட இதைப்பற்றி அவர் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் உள்பட பல வெளிநாட்டு, முக்கியப் பிரமுகர்களுக்கு கிட்டத்தட்ட 41 ஆண்டுகளாக டெல்லி ஐடிசி மயூரா புஹாரா உணவுகள் வழங்கப்பட்டுவருகின்றன.
2010, 2015ஆம் ஆண்டுகளில் பராக் ஒபாமா அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோருக்கும் இங்கிருந்துதான் உணவுகள் வழங்கப்பட்டது. ஒபாமாவுக்கு அளிக்கப்பட்ட விருந்தில், தந்தூரி ஜிங்கா, மச்சி டிக்கா, முர்க் போடி புகாரா, கபாப்ஸ் ஆகியன முக்கியத்துவம் பெற்றது நினைவுகூரத்தக்கது.