நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகளவில் உள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் பலரும் வீடுகளில் முடங்கியுள்ளனர். வைரஸை தடுப்பதற்கான முழு முயற்சியில் சுகாதார ஊழியர்கள், மருத்துவர்கள், செவிலியர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அனைவரின் கவனமும் கரோனா வைரஸ் மீது உள்ள நிலையில், சத்தமில்லாமல் பல கொடிய நோய்கள், தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளன. கரோனா தடுப்பு சிகிச்சைக்கு மட்டும் முன்னுரிமை வழங்கி, பிற நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி மருந்து, திட்டங்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என உலக சுகாதார அமைப்பும் முன்னரே எச்சரித்திருந்தனர்.
குறிப்பாக டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா, டைபாய்டு, காலரா, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் மழைக்காலங்களில் அதிகளவில் பரவும் தன்மை கொண்டது. மக்கள் கவனிக்கத் தவறினால் உயிரைப் பறிக்கும் அபாயமும் உள்ளது.