அமெரிக்க அதிபர் டெனால்ட் ட்ரம்பின் இந்திய வருகை, கடந்த ஒரு வருடமாக இரு நாடுகளுக்கிடையே நடந்து வரும் வர்த்தக போர் முடிவுக்கு வருமா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. இந்திய வருகை குறித்து டிரம்ப் அறிவித்ததுமே, ஒரு பொதுவான சம்மதத்தின் அடிப்படையில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதும், பொருளதாரத்தை பாதுகாக்கும் தன்மை, வர்த்தக பிரச்னைகள் நிர்வாகத்தை இயக்குபவையாக இருந்தன. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், பாதுகாப்புத் துறையில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்பட்சத்தில், வர்த்தக துறையில் இரு நாடுகளுமே முரண்பட்டு முட்டி மோதிக்கொள்கின்றன. பால் துறை, வேளாண் துறை, தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது.
சீனா, மெக்சிகோ, ஜப்பான் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ள ட்ரம்ப், உலக வர்த்தக அமைப்பு போன்ற (World Trade Organisation) சர்வதேச வர்த்தக அமைப்புகள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முக்கிய பங்காளி அமெரிக்கா ஆகும். கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையே 182 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புக்கு வர்த்தகம் நடைபெற்றது. இரு நாடுகளுக்கிடையே வர்த்தகத்தில் உள்ள சுணக்கங்கள் தீர்க்கப்பட்டால், அடுத்த சில வருடங்களில் வர்த்தகம் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று சொல்வதில் தவறில்லை.
இரு நாடுகளுக்கிடையே வர்த்தக உறவு உயர கண்டிப்பாக ஒப்பந்தம் தேவை என்பது காலத்தின் கட்டாயம். இந்த பிரச்னையில் யதார்த்தமான அணுகுமுறையை கொண்டு சீனா பிரச்னையை தீர்த்துள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். இரு நாடுகளுக்கிடையே வர்த்தகத்தில் உள்ள பிரச்னைகளை தீர்க்க முடிந்தால் மட்டுமே பாதுகாப்புத் துறை இணைந்து செயல்படுவதிலும் கூடுதல் நன்மை ஏற்படும். இந்திய- பசிபிக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதும், டிரம்ப்பின் அஜண்டாவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த வருடம் பென்டகன் ஆசியா -பசிபிக் என்ற பெயருக்கு பதிலாக இந்தோ- பசிபிக் என்ற வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியது. இதனால், இந்தப் பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதில் இந்தியாவுக்குள்ள முக்கியத்துவத்தை மறைமுகமாக அமெரிக்கா உணர்த்தியது.
இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலிய நாடுகளுடன் இணைந்து இந்தியா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்வது இந்த பிராந்தியத்தில் சீனா கொண்டிருக்கும் ஆதிக்க எண்ணத்தின் அடிப்படையில்தான். இந்த நான்கு நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களும் கடந்த ஆண்டு ஐ.நா. சபை மாநாட்டின்போது சந்தித்து பேசினர். அதோடு, புவிசார் ராணுவ பயிற்சிகளை இந்தப் பகுதியில் மேற்கொள்வது குறித்தும் விவாதித்தனர். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியான பிறகு, அமெரிக்காவின் செல்வாக்கு சர்வதேச நாடுகள் மத்தியில் சரிந்துள்ள நிலையில், சீனா தன் செல்வாக்கை சர்வதேச சமூகத்தில் ராணுவ ரீதியாகவும் பொருளதாரரீதியாகவும் பலப்படுத்தியுள்ளது.