தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெட்ட வெட்ட துளிர்க்கும் கடன் செயலிகளை கட்டுப்படுத்துமா அரசு? - கூகுள் ப்ளே ஸ்டோர்

மின்னணு கடன்கள் தருவதாக உறுதிமொழி தரும் இந்த ஏமாற்றுக்காரர்கள் விரிக்கும் வலையில் விழுந்துவிட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால் ரிசர்வ் வங்கியின் விதிகள் மீறப்பட்டபோதும், அரசு விழித்துக்கொள்ளாமல் இருப்பது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Will the government control the Digital Loan Apps?
Will the government control the Digital Loan Apps?

By

Published : Feb 9, 2021, 6:36 PM IST

டிஜிட்டல் லோன் ஆப்ஸ் என்னும் மின்னணு கடன் செயலிகளின் ஊழியர்கள் அட்டை பூச்சிகளை விட மோசமானவர்கள். அட்டை பூச்சிகள் மனிதனின் ரத்தத்தை மட்டுமே உறிஞ்சி எடுப்பவை. ஆனால் இவர்கள் செயலிகளில் சிக்கும் மனிதர்களின் உயிரையே எடுத்து விடுகிறார்கள். டிஜிட்டல் லோன் ஆப்ஸின் அராஜகங்கள் கடன் வாங்கியிருந்த பலரைத் தற்கொலை செய்ய தூண்டிவிடுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அந்தச் செயலிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட ஒரு பொதுநல வழக்கில் தெலங்கானா உயர்நீதி மன்றம் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருக்கிறது.

இந்தச் செயலிகள் எந்த ஆவணங்களும் இல்லாமல் உடனடியாகக் கடன்கொடுத்துத் தங்களின் எலிப்பொறிக்குள் பலரைச் சிக்கவைத்து விடுகின்றன. இந்தச் செயலிகளை உடனடியாக இணையத்திலிருந்து நீக்குமாறு காவல்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டிருக்கிறது.

கடன் செயலிப் பிரச்னை என்பது குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் மட்டுமோ அல்லது பிராந்தியத்தில் மட்டுமோ இருக்கும் பிரச்னை அல்ல. டிஜிட்டல் லோன் ஆப்ஸ் நடவடிக்கைகளால் ஏற்பட்ட கொந்தளிப்பின் விளைவாக, சென்னையிலும், பெங்களூருவிலும் காவல்துறை அலுவலர்கள் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கும்படி பாதிக்கப்பட்டவர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடன் செயலிகளை சமாளிக்கவென்று ஒரு சிறப்பு குற்றப் பிரிவு உண்டாக்கப்பட்டது மட்டுமின்றி, இந்தச் செயலிகள் மூலம் நிகழ்ந்த தற்கொலைகளைக் கருத்தில் கொண்டு மாநிலங்களின் அலுவலர்கள் பிரச்னையில் சுமூக தீர்வுகாண ரிசர்வ் வங்கியிடமும், கூகுளிடமும் பேசத் தொடங்கிவிட்டனர்.

மின்னணு கடன்கள் தருவதாக உறுதிமொழி தரும் இந்த ஏமாற்றுக்காரர்கள் விரிக்கும் வலையில் விழுந்துவிட வேண்டாம் என்று ரிசர்வ் வங்கியும் தன்பங்குக்கு மக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது. முன்பின் தெரியாத மனிதர்களிடம் தங்கள் ஆதார் விவரங்களை அல்லது வங்கிக்கணக்குத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கையை மட்டும் விடுத்துவிட்டு ரிசர்வ் வங்கி இந்தப் பிரச்னையிலிருந்து ஒதுங்கிக் கொண்டது.

நூற்றுக்கணக்கான கடன் செயலிகளின் நடவடிக்கைகளைப் பற்றி விசாரணை செய்தபின்பு, சிலவற்றை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கிவிட்டதாகக் கூகுள் தனது நிலைப்பாட்டை கூறியது. மீதமிருக்கும் கைப்பேசி செயலிகள் உள்ளூர் சட்டங்களின் படியே இயங்க வேண்டும் என்றும் அது ஓர் அறிக்கையில் கூறியது. ஆனால் நிஜத்தில், நீக்கப்பட்ட செயலிகள் பல புதிய பெயர்களோடு மீண்டும் அரங்கேறின என்பதைக் அவை கவனத்தில் கொள்ளவில்லை.

சட்டத்தை மதித்து நடந்து கொள்ளுங்கள் என்று சும்மா போதிப்பதும், எச்சரிப்பதும் போதாது. மக்களைத் தற்கொலைக்குத் தூண்டும் கடன் செயலிகளுக்குக் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தச் செயலிகளின் அமைப்பாளர்கள் மீது கொலைவழக்குத் தொடர்ந்து அவர்களுக்குத் தண்டனை வாங்கித் தரும் விதத்தில் எவ்வித சமரசமும் இல்லாத நுட்பமான சட்ட ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

ரிசர்வ் வங்கி இந்த விசயத்தில் அக்கறையில்லாத முறையில் செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளின் பின்னணியில், தனது கட்டுப்பாட்டு எல்லைக்குள் வருகின்ற நிதி நிறுவனங்களின் நடவடிக்கைகளையும், மற்றும் மின்னணு கடன் செயலிகளின் நடவடிக்கைகளையும் ஆய்வதற்காக ஒரு சிறப்புக் குழுவை அது அறிவித்திருக்கிறது. கடன் வழங்கும் தொழிலில் ஈடுபடும் தகுதியைப் பெற வேண்டுமென்றால், ஒவ்வொரு மின்னணு செயலியும் வங்கியல்லாத நிதி நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும். இந்த விதி தான்தோன்றித்தனமாக மீறப்படும்போது கூட ரிசர்வ் வங்கி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் அது எப்போது தன் உறக்கத்திலிருந்து விழித்தெழப் போகிறது என்று நமக்குத் தெரியவில்லை.

நாடாளுமன்றத்தில் இதுசம்பந்தமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது கூட, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர், இது மாநில விவகாரங்கள் எனக் கூறி தனது முழுமையான அக்கறையின்மையைக் காட்டிவிட்டார்.

ஜகார்ட்டாவில் (இந்தோனேசியா) இருந்துகொண்டு இந்தக் கடன் செயலிகளை உருவாக்கியவர் ஒரு சீனர். டெல்லி உள்பட பல்வேறு இந்திய மாநகரங்களில் நடந்த விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டனர். வெறும் ஏழே மாதங்களில் இந்தக் கடன் செயலிகள் 25,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒட்டுமொத்த பரிவர்த்தனைகள் செய்திருக்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியின் பின்னிருக்கும் ஏமாற்றுக்காரர்களைக் கண்டுபிடிப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசுகள், ரிசர்வ் வங்கி, லஞ்சக் கண்காணிப்புத் துறை, காவல்துறை ஆகியவற்றிற்கு இடையில் ஓர் அர்த்தமுள்ள ஒருங்கிணைப்பு இருப்பது நல்லது.

பயனாளிகளுக்குப் பாதுகாப்பான சேவை தருவதற்குத் தான் கடமைப்பட்டிருப்பதாக கூகுள் சொல்கிறது. ஆனால் கூகுள் நீக்கிய பல கடன் செயலிகள் புதிய பெயர்களோடு மீண்டும் எழுந்துவந்த நிஜத்தை அது கண்டுகொள்ளவே இல்லை. இறுதியில் இது எல்லாம் குடிமக்களின் நலனுக்குத்தான் பெருங்கேடாக முடியும். மத்திய அரசும், மாநில அரசுகளும் அரசு ஏஜென்சிகளோடு கைக்கோர்த்து செயல்பட்டால்தான், இந்த மின்னணு உலகத்தின் மரண வியாபாரிகளின் அபாயத்தை ஒழித்துக் கட்ட முடியும்.

ABOUT THE AUTHOR

...view details