உலகை ஆட்டிப்படைத்துவரும் கோவிட்-19 தொற்றை ஏழு நாள்களில் குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மருந்தை கண்டுபிடித்திருப்பதாகக் கூறி, கடந்த செவ்வாய்க்கிழமை பதஞ்சலி நிறுவனம் 'கரோனி' என்ற ஒரு ஆயுர்வேத மருந்தை வெளியிட்டது.
இருப்பினும், முறையான அனுமதி பெறாமல் வெளியிடப்பட்ட இந்த மருந்து குறித்த விளம்பரங்களை உடனே நிறுத்துமாறு பதஞ்சலி நிறுவனத்திற்கு ஆயுஷ் அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கரோனாவை குணப்படுத்த முடியும் என்று பதஞ்சலி வெளியிட்ட போலி மருந்துகளை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மகாராஷ்டிர உள் துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில், "பதஞ்சலி வெளியிட்டுள்ள கரோனி மருந்திற்கு முறையான மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதா என்பதை ஜெய்ப்பூரிலுள்ள தேசிய மருந்துவ அறிவியல் நிறுவனம் கண்டுபிடிக்கும். போலி மருந்துகளை விற்பனை செய்ய மகாராஷ்டிர அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்பதை ராம்தேவ்விற்குத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.