2012ஆம் ஆண்டில் டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கு நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இவ்வழக்கில், ஆறு பேர் கைதுசெய்யப்பட்டனர். அதில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ராம் சிங் திகார் சிறையில், 2013 மார்ச் 11ஆம் தேதி சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இன்னொரு குற்றவாளி சிறுவர் என்பதால் மூன்றாண்டு சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டு, பின் விடுவிக்கப்பட்டார்.
நிர்பயா வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய முகேஷ், வினய், அக்ஷய், பவன் ஆகிய நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து டெல்லி விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நால்வரையும் வரும் மார்ச் 20ஆம் தேதியன்று அதிகாலையில் தூக்கிலிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப், நாளை தூக்கிலிடப்படவுள்ள நிர்பயா குற்றவாளிகள் குறித்து பேசினார். வழக்கின் தீர்ப்பு குறித்து பல்வேறு விதங்களில் கேள்வி எழுப்பினார்.
அவர் கூறியதாவது: நிர்பயா வழக்கில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதால் இதுபோன்ற குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறதா?. உச்ச நீதிமன்றம் மிகவும் அரிதாகவரும் வழக்குகளில், எவ்வித சந்தேகமுமில்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், எல்லா வாய்ப்புகளும் நிறைவடைந்தால் மட்டுமே, மரண தண்டனை விதிக்க வேண்டுமென பச்சன் சிங் வழக்கில் தெரிவித்தது.