தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மாநிலங்களுக்கு மத்திய அரசு துரோகம் இழைக்கிறது' - ப.சிதம்பரம் தாக்கு! - நாட்டின் பொருளாதார வீழ்ச்சி

டெல்லி : கடவுளின் செயலான கரோனாவால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்ததாக கூறும் நிதியமைச்சர், 2017 முதல் மோசமடைந்த நிதிநிலைமைக்கு யார் காரணமென விளக்கம் தருவாரா என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பி உள்ளார்.

மாநிலங்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் - ப.சிதம்பரம் தாக்கு!
மாநிலங்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் - ப.சிதம்பரம் தாக்கு!

By

Published : Aug 29, 2020, 3:03 PM IST

ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று நடைபெற்ற 41ஆவது சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கூட்டத்தின் போது நாட்டின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பான ஊடகத்தினர் கேள்விக்கு பதிலளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பொருளாதாரம் கரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டது, கரோனா கடவுளின் செயல்" என்றார். நிதிமைச்சரின் இந்த சர்ச்சையான கருத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து கடும் கண்டனம் எழுந்துவருகிறது.

இது தொடர்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அதில், "உலகளாவிய பெருந்தொற்று நோயான கோவிட்-19 கடவுளின் செயல் என்றால் பாஜக தலைமையிலான மத்திய அரசின் 2017-18, 2018-19, 2019-20 ஆகிய ஆண்டுகளில் நாட்டின் நிதிநிலை, பொருளாதாரம் மோசமான நிலையை அடைந்ததை எப்படி புரிந்துக்கொள்வது ?

கரோனா நெருக்கடிக்கு முன்பான காலக்கட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்ததற்கு, மத்திய பாஜக அரசின் தவறான நிர்வாகம் தான் காரணம் என எடுத்துக்கொள்ளலாமா ? அதற்கு அமைச்சரின் விளக்கம் என்ன ? கடவுளின் தூதராக விளங்கும் மத்திய நிதியமைச்சர் இதற்கு எல்லாம் பதிலளிப்பாரா?.

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை நிலுவையில் இருப்பதால் வருவாய் இழப்பை ஈடுகட்ட மாநிலங்களுக்கு அதிக கடன் வாங்க வேண்டும். சரக்கு மற்றும் சேவை வரியினால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்புக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்காமல் மாநிலங்களுக்கு இரண்டு தெரிவுகளை வழங்கியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

சந்தையிலிருந்து திரட்டிக் கொண்டாலும் சரி, ரிசர்வ் வங்கி மூலமாக சந்தையிலிருந்து கடன் வாங்கினாலும் சரி ஒட்டுமொத்த நிதிச்சுமையும் மாநிலங்கள் தலையில்தான் விழும். மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய இரண்டு ஆலோசனையும் மாநிலங்களின் நலனைப் பற்றி சிறிதும் சிந்திக்காமல் சொல்லப்படும் தெரிவுகளேயாகும். இவை சட்டத்தை மிக நேரடியாக மீறுவதாகும். அத்துடன் மாநில அரசுக்கு செய்யும் பச்சைத் துரோகம்" என தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details