சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இந்த வழக்கு தற்போது ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்துவருகிறோம். தீர்ப்பின் முழு விவரம் கிடைத்த பின்னர் இது குறித்து பேசப்படும். சபரிமலை கோயிலுக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்.
சபரிமலை விவகாரத்தில் அரசின் நடைமுறை இதுதான். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் நாங்கள் அனைவரும் உறுதியாக உள்ளோம். தற்போது சபரிமலை வழக்கு ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருந்து ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க மேலும் இரண்டு புதிய நீதிபதிகள் அனுமதிக்கப்படவுள்ளனர். இவ்வாறு இந்தத் தீர்ப்பு சற்று குழப்பமாக உள்ளது” என்றார்.
இதையடுத்து செய்தியாளர்கள் அவரிடம் இந்துக்கள் அல்லாத இஸ்லாமியர்கள், பார்சியர்கள் சபரிமலை ஏற்றத்துக்கு அனுமதிக்கப்படுவார்களா? என கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்துவிட்டார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பேட்டியின்போது, தேவசம் (இந்து கோயில்கள்) அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் உடனிருந்தார்.
இதையும் படிங்க: சபரிமலை தீர்ப்பை மதித்து நடந்துகொள்ளுங்கள் - மதுரை ஆதீனம் பேட்டி