இந்தியாவில் தினந்தோறும் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும், மறுபக்கம் குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. ஆனால் மக்களிடையே கரோனா குறித்த அச்சம் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் பிற நோய்களால் உயிரிழக்கும் உறவினர்களின் இறுதிச்சடங்குக்குக்கூட செல்ல யாரும் முன்வருவதில்லை. சில இடங்களில் தன்னார்வலர்களே முன்னின்று இறுதிச்சடங்கை நடத்திவிடுகின்றனர்.
ஆனால், கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள ராங்கோலி ஹல்லாவைச் சேர்ந்த அன்னப்பாவுக்கு அந்த உதவி கிடைக்கப்பெறவில்லை. சிறிய வீட்டில் குறைந்த வருமானத்தோடு வாழ்ந்து வந்த அன்னப்பா கடந்த சில நாள்களாக உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) அன்று உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அன்னப்பாவின் மனைவி பர்வதம்மா உறவினர்களுக்குத் தெரிவித்துள்ளார். ஆனால், கரோனா அச்சத்தின் காரணமாக அன்னப்பாவிற்கு இறுதிச்சடங்கு செய்ய உறவினர்கள் யாரும் முன்வரவில்லை.