ஆப்கானிஸ்தானின் சாம்கான் பகுதியில் அமைந்துள்ள குருத்வாரா தலா சாஹிப்பில், பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிதான் சிங் ஜூன் 17 அன்று தாலிபான்களால் கடத்தப்பட்டார்.
1992ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் நிலவிய உள்நாட்டு அமைதியின்மை காரணமாக, அங்கிருந்து வெளியேறி இந்தியாவிற்கு வந்த சிங் குடும்பத்தினர் ஆறு பேர் இங்கு அகதிகளாக டெல்லியில் தங்கியுள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ள மெஹர்வந்தி, "இந்திய அரசு எங்களுக்கு தகுந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
எனது கணவர் நிதான் சிங் விடுதலையான உடனேயே அவரை மீண்டும் டெல்லிக்கு திருப்பி அனுப்பவும், விரைவில் எங்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்கவும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
நிதான் சிங் கடத்தப்பட்டதற்கு இந்தியா அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக. வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிறுபான்மை மக்களை பயங்கரவாதிகள் குறிவைத்து துன்புறுத்துவது மிகுந்த கவலைக்குரியது" என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் இந்திய அரசு ஆப்கானிய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ஆப்கானிஸ்தான் அரசால் நிதான் சிங் பாதுகாப்பான முறையில் விடுதலையைப் பெறுவார் என்று நம்புவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தற்போது 600-க்கும் மேற்பட்ட சீக்கிய குடும்பங்கள் மட்டுமே உள்ளன. 1990களில் தாலிபான்கள் எழுச்சியால், ஆப்கானிஸ்தானில் வசித்துவந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்து, சீக்கிய குடும்பங்கள், இந்தியா, கனடா, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளுக்கு புலம்பெயர்ந்தன.