புதுச்சேரி மாநிலம், வில்லியனூரை அடுத்த காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (35). இவர், ஐடிஐ மெக்கானிக் படித்துள்ளார். இவர் தொண்டமாநத்தம் அரசு உதவிபெறும் பள்ளியில் தற்காலிக பேருந்து ஓட்டுநராக பணியாற்றிவந்தார். இவருக்கு புவனேஸ்வரி (29) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.
புவனேஸ்வரி எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி இரவு தொண்டமாநத்தம் பகுதியில் வேலையை முடித்துவிட்டு, தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் வரும்போது பின்புறம் வந்த கார் மோதி பலத்த காயமடைந்து, ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி மார்ச் 17ஆம் தேதி உயிரிழந்தார். இது குறித்து புதுச்சேரி வில்லியனூர் மேற்கு போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்நிலையில் கந்தசாமி இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகாரளித்ததின் பேரில், இந்த வழக்கு வில்லியனூர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
பின்னர், காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த லிங்காரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவரைப் பிடித்தனர். அவரிடம் நத்திய விசாரணையில், ஸ்ரீதரன் என்கிற அஜித்குமார் கூறியதன்பேரில், கந்தசாமியை கார் ஏற்றி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
கந்தசாமியும், காட்டேரிக்குப்பத்தைச் சேர்ந்த அஜித்குமாரும் ஓட்டுநர் என்பதால் இருவரும் அடிக்கடி கந்தசாமி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இதில் அஜித்குமாருக்கும், கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரிக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதனை கந்தசாமி கண்டித்ததால், தங்களுக்கு இடையூறாக இருந்த கந்தசாமியை கொலை செய்ய புவனேஸ்வரியும், அஜீத்குமாரும் முடிவெடுத்துள்ளனர்.
இதற்காக திட்டம் தீட்டி, நண்பர் பிரவீன்குமார் உதவியுடன் கார் ஏற்றி கந்தசாமியைக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றிய வில்லியனூர் காவல் துறையினர், கந்தசாமியின் மனைவி புவனேஸ்வரி, அஜீத்குமார், அவரது நண்பர் பிரவீன்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கணவனை கொலை செய்து நாடகமாடிய மனைவி: 9 மாதங்களுக்குப் பின்பு போலீஸ் விசாரணையில் சிக்கினார்