திருவனந்தபுரம் (கேரளா): கேரள தங்க கடத்தல் வழக்கில், முன்னாள் முதன்மை செயலாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என பாஜக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
கேரளாவில் தூதரகம் பெயரை பயன்படுத்தி 30 கிலோ தங்கம்கடத்திவரப்பட்டது. இந்தத் தங்கத்தை பறிமுதல்செய்த அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டதில், ஸ்வப்னா சுரேஷ் என்பவர் இதில் முக்கிய பங்குடையவர் எனத் தெரியவந்தது. மேலும், இந்தத் தங்கம் கடத்தல் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தொடர்ந்து, முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கருக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவருக்கு தொடர்பு இருப்பதாக முகாந்திரம் இருந்த நிலையில், அமலாக்கப் பிரிவு அலுவலர்களால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் பதவி விலகக்கோரி அரசியல் கட்சியினர் போராட்டம் இதனால் முதலமைச்சராக இருக்கும் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என பாஜக, காங்கிரஸ் கட்சியினர் கோழிக்கோட்டில் உள்ள ஆணையர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். அப்போது தடுப்புக் கம்பிகளை தாண்டிச் செல்ல முயன்றனர்.
எனவே காவல் துறையினர் தண்ணீரைப் பீய்ச்சியடித்து அவர்களை கலைத்தனர். மேலும், கூட்டத்தை கலைக்க தடியடியும் நடத்தினர். இதனால் அந்த இடம் போர்க்களமாக காணப்பட்டது.