இந்தியாவில் கரோனா தொற்றுப் பரவலுக்கு வழி வகுத்ததாகக் கூறப்படும் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்களின் பெயர்களை மத்திய உள்துறை அமைச்சகம் கருப்புப் பட்டியலில் இணைத்ததோடு, அவர்களின் விசாவையும் ரத்து செய்தது. இதனால் பலரும் சொந்த நாட்டிற்குத் திரும்ப முடியாமல் இந்தியாவிலேயே முடங்கியுள்ளனர்.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வில் கடந்த வெள்ளிக் கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளை பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அதில், ”சமய மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்களின் பெயர்கள் அனைத்தும் மத்திய அரசின் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது குறித்து, அவர்கள் அனைவருக்கும் தனித்தனியாக தெரிவிக்கப்பட்டதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதேபோல் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளோரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டால், அவர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படாமல் ஏன் இந்தியாவிலேயே இன்னும் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும், மத்திய அரசு இவர்களின் விசாவை ரத்து செய்துள்ளதா என்பதை அரசு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வருகிற ஜூலை இரண்டாம் தேதி தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியும் விசாரணையை ஜூலை இரண்டாம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க :மாநில மனித உரிமை ஆணையத்தை நாடிய தெலங்கானா காங்கிரஸ்!