கடன்தொகையைச் செலுத்த தவறிய பெரும் நிறுவனங்கள் தொடர்பில் சௌரப் ஜெயின் மற்றும் ராகுல் சர்மா ஆகிய இருவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கொன்றைத் தொடுத்துள்ளனர்.
அம்மனுவில், "சராசரியான குடிமக்கள் தாங்கள் பெறும் கடன்களை திரும்பச் செலுத்தவில்லை என்றால் கடன்களை வசூலிக்கும் அலுவலர்கள், அவர்களிடமுள்ள அனைத்து உடைமைகளின் விவரங்களையும் சேகரித்து அவற்றின் மூலமாக கடனை மீட்கின்றனர். ஆனால் பெரிய நிறுவனங்களின் விளம்பரதாரர்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் பிற மூத்த நிலை நிர்வாகிகள் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து எப்படி எளிமையாக தப்பிக்கிறார்கள்.
பொதுத்துறை நிறுவனங்கள் இதுபோன்ற நிறுவனங்களிடம் கடுமையாக சட்ட விதிகளை பின்பற்றுவதில்லை. இதன் விளைவாக பொதுக் கருவூலத்திற்கு மட்டுமல்ல, சாமானிய மக்களுக்கும் பெரும் இழப்பு ஏற்படுகிறது.
நாட்டிற்கு நூற்றுக்கணக்கான கோடி பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் கடன்தொகையைச் செலுத்த தவறிய பெரும் நிறுவனங்கள் தொடர்பில் மத்திய நிதி அமைச்சகம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?
கடன்தொகையைச் செலுத்த தவறிய பெரும் நிறுவனங்களின் பிணைகளை பொதுத்துறை வங்கிகள் கையப்படுத்துவது தொடர்பில் மத்திய நிதி அமைச்சகத்திற்கு உத்தரவளிக்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன் மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் மனன் மிஸ்ரா மற்றும் வழக்குரைஞர் துர்கா தத் ஆகியோர் வாதிடுகையில், "கடந்த 2019-2020 நிதி ஆண்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு சுமார் ரூ.1.85 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடன்களைப் பெற மிகப்பெரிய கார்ப்பரேட் முதலாளிகளிடம் தனிப்பட்ட உத்தரவாதங்களை வழங்க வேண்டுமென வங்கிகள் ஏன் எந்த நடைமுறை விதிகளையும் பின்பற்றவில்லை. குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் சுற்றறிக்கைக்கு இணங்க உத்தரவிடவில்லை" என கேள்வி எழுப்பினர்.
அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "இந்த விவகாரம் தொடர்பாக நிதியமைச்சகம் ஏற்கனவே ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மனுதாரர்கள் முதலில் இது தொடர்பாக அமைச்சகத்தின் பதிலைப் பெற வேண்டும். பின்னர் நீதிமன்றத்தின் உதவியை நாடலாம்" என தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கவனித்த நீதிமன்றம், "அரசுத்தரப்பு வழக்குரைஞர் மனு தொடர்பாக அமைச்சகத்தின் முடிவை, நடைமுறைப்படுத்தியவை தொடர்பில் அறியவேண்டும் என்பதால் மனுதாரர்கள் முதலில் நிதி அமைச்சகத்தை அணுக வேண்டும் என்று நீதிமன்றம் கருதுகிறது.
மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க, நிதி அமைச்சகத்தின் பிரதிநிதியை நியமித்து பதிலளிக்க அமைச்சகத்திற்கு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்படும். இப்போது, இந்த மனுவை திரும்பப்பெற்று இது தொடர்பாக நிதி அமைச்சகத்தை அணுகவும் நாங்கள் மனுதாரர்களை அனுமதிக்கிறோம்.
இன்று முதல் இரண்டு வார காலத்திற்குள் நிதி அமைச்சகம் அறிக்கையை சமர்பித்து, நான்கு வார காலத்திற்குள் நீதிமன்றத்தில் பதிலளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. நிதி அமைச்சகத்தின் முடிவைத் தொடர்ந்து பின்னர் மனுதாரர்கள் தேவைப்பட்டால் மேற்கொண்டு நீதிமன்றத்தின் உதவியை நாடலாம்” என்று உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தது.