இத்தாலியில் ஒவ்வொரு நாளும் புதிதாக கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதற்கு முந்தைய நாளைவிட குறைவாக பதிவாகிவருவது நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதை மட்டும் வைத்துக்கொண்டு வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது என்று கூற முடியாது என்று தெரிவித்த அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் வரும்காலங்களில் நிலவும் சூழ்நிலையை மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று கூறினார்.
இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கரெட் ஹாரிஸ், "பல ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பரவல் கட்டுக்குள் வருவதற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் தெரியத்தொடங்கியுள்ளன.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும்.
அமெரிக்காவில் தற்போது மிக வேகமாக கோவிட்-19 வைரஸ் தொற்று பரவிவருகிறது. இருப்பினும் இப்போது வைரஸை கண்டறிய நடைபெறும் சோதனைகளும் சுகாதாரத் தறை நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.