பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்று வருகிறது. பாஜக ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் என மற்றொரு முனையில் மெகா கூட்டணி களத்தில் உள்ளது.
இந்நிலையில், பாஜகவை தோற்கடிக்க முடியும் என்பதை எதிர்க்கட்சிகள் நம்ப வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு பிறகு நடைபெற்ற சட்டப்பேரவை மற்றும் இடைத்தேர்தல்களில் பாஜகவின் வெற்றி விழுக்காடு வெகுவாக குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "2019 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, 330 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 51 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகளை கருத்தில் கொண்டால், மக்களவைத் தொகுதிகளுக்கு கீழ்வரும் இந்த 381 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 319 இல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அதற்குப் பிறகு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், 163 தொகுதிகளில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. பாஜகவை வீழ்த்த முடியாது என யார் சொன்னது?
பாஜகவை வீழ்த்த முடியும் என்பதை எதிர்க்கட்சிகள் நம்ப வேண்டும். பிகாரில் அது சாத்தியமாகும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது" என்றார்.