அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கோவிட்-19 தாக்கம் அதிகரிக்க காரணம் என்ன என்றும் அதிகப்படியான உயிரிழப்புகள் நிகழ யார் காரணம் என்பதனையும் காணலாம்.
மே 25ஆம் தேதி கணக்கின்படி 14ஆயிரத்து 63 பேர் கோவிட்-19 தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 888 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதில் தலைநகர் அகமதாபத்தில் மட்டும் 10ஆயிரத்து 590 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 722 பேர் உயிரிழந்தனர்.
ஆம், 81.30 விழுக்காடு பேர் மட்டும் தலைநகரில் இறந்தனர். மாநிலத்தில் மே 24ஆம் தேதி பதிவான 29 கரோனா மரணங்களில், 28 அகமதாபாத்தில் மட்டும் பதிவாகியுள்ளன. எனவே, நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்பது இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது.
குஜராத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் கரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 85 விழுக்காடு பேர் அகமதாபாத்தை சேர்ந்தவர்கள். அதில் 62 விழுக்காடு உயிரிழப்புகள் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் நிகழ்ந்திருக்கின்றன என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.
இவ்வேளையில், வழக்கு ஒன்றில் தீர்ப்பளித்த குஜராத் உயர்நீதிமன்றம், கரோனா நெருக்கடியை மாநில அரசு கையாண்ட விதம் குறித்தும், அரசு மருத்துவமனைகளின் நிலை குறித்தும் கடுமையாக சாடியுள்ளது.
மூழ்கும் கப்பல் போல அரசு மருத்துவமனைகள் இருப்பதாகவும், கரோனா பாதிப்பு குறித்த தவறான புள்ளி விவரங்களை திட்டமிட்டே அரசு வெளியிட்டிருப்பதாகவும் நீதிமன்றம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதுவரை எந்தவொரு மாநில அரசுகளுக்கு எதிராகவும் இதுபோன்ற வார்த்தைகளை நீதிமன்றங்கள் பயன்படுத்தியதில்லை என்பது அறிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும்.