அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வெளிநாடு பயணத்தின் போது எப்போதும் பயணம் செய்யும் நாடுகளில் சில ட்விட்டர் கணக்குகளை அமெரிக்க வெள்ளை மாளிகை பின்தொடரும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தார். அதற்கு முன்னதாக இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் அலுவலகம், இந்திய தூதரகம், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க தூதரகத்தின் இந்திய அலுவலர் ஆகியோரைப் பின்தொடர்ந்தது.
இதனால் இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்பு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது என பாஜகவினர் கூறி வந்தனர்.
இந்நிலையில் அமெரிக்க வெள்ளை மாளிகையின் ட்விட்டர் கணக்கு, தற்போது இந்த ஆறு கணக்குகளை பின்தொடர்வதிலிருந்து வெளியேறியுள்ளது. இதுகுறித்து வெள்ளை மாளிகை நிர்வாகத் தரப்பிலிருந்து பேசுகையில், ''வெள்ளை மாளிகையின் ட்விட்டர் கணக்குகள் எப்போதும் அமெரிக்காவின் மூத்த அரசியல் தலைவர்களை மட்டுமே பின் தொடரும். அமெரிக்க அதிபர் பயணம் செய்யும் போது, சில ட்வீட்களை ரீ ட்வீட் செய்வதற்காக பின்தொடர்வோம். அதையடுத்து சில மாதங்களுக்கு பிறகு, பின்தொடர்வதை நிறுத்திவிடுவோம்'' என்றனர்.
இந்த விவகாரம் இந்திய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரின் கணக்குகளை பின்தொடர்வதை வெள்ளை மாளிகை நிறுத்தியுள்ளது. இதனை வெளியுறவுத் துறை அமைச்சகம் கவனிக்க வேண்டும்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:10 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்க பொருளாதாரம் பெரும் சரிவு