தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தொழிலாளர் சட்டங்களில் சமரசம்' - ஆபத்தா, வளர்ச்சியா? - தொழிலாளர்கள்

ஹைதராபாத்: இந்தியா ஏற்கனவே உலகின் மலிவான, மிகவும் சுரண்டப்பட்ட தொழிலாளர் சக்திகளில் ஒன்றாகும். தொழிலாளர் செலவுகள் இந்தியாவில் மொத்த தொழில்துறை செலவினங்களில் ஒப்பீட்டளவில் சிறிய விகிதத்தில் உள்ளன. இதற்கிடையில் கோவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையே இந்திய தொழிலாளர்களின் நிலை குறித்து பார்ப்போம்.

labour laws  COVID-19  Workmen Compensation Act, 1923  Bonded Labour System (Abolition) Act, 1976  Factories Act, 1948  The Minimum Wages Act, 1948  இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள்  தொழிலாளர் சட்டங்களில் சமரசம்  தொழிலாளர் சட்ட சீர்திருத்தம்  தொழிலாளர்கள்  இந்தியா, குஜராத், உத்தரப் பிரதேசம், வியட்நாம்
labour laws COVID-19 Workmen Compensation Act, 1923 Bonded Labour System (Abolition) Act, 1976 Factories Act, 1948 The Minimum Wages Act, 1948 இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர் சட்டங்களில் சமரசம் தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் தொழிலாளர்கள் இந்தியா, குஜராத், உத்தரப் பிரதேசம், வியட்நாம்

By

Published : May 15, 2020, 11:36 AM IST

Updated : May 15, 2020, 1:21 PM IST

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறைச் சங்க கூட்டமைப்பு, அசோசெம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மத்திய தொழிலாளர் அமைச்சர் (தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்) சந்தோஷ் குமார் கங்வாருடன் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

கோவிட்-19 தொற்றுநோய் பரவலைத் தடுக்கும்பொருட்டு அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய முழு ஊரடங்கின் மூலம் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து தொழில் துறையை மீட்க அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு நாடு முழுவதும் சில முக்கிய விதிகளைத் தவிர்த்து தொழிலாளர் சட்டங்களை இடைநிறுத்த கோரிக்கைவிடுக்கப்பட்டது.

இருப்பினும், இந்தக் கூட்டத்திற்கு முன்பே மே 6ஆம் தேதியன்றுஉத்தரப் பிரதேச அரசு, தொழிலாளர் சட்டங்களில் 35, 38 ஆகிய பிரிவுகளை மூன்று ஆண்டுகளுக்கு இடைநிறுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா, இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம் போன்ற மாநில முதலமைச்சர்கள் முதலீட்டை ஈர்ப்பது குறித்தும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்தும் வாதிட்டனர்.

இந்த மாற்றங்களுக்குப் பதிலளிக்கும்விதமாக அல்லது தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் அமைப்பை அணுகுவது குறித்து பரிசீலித்துவருவதாக பத்து மத்திய தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.

ஏனெனில் இது சங்க சுதந்திரம், கூட்டு பேச்சு உரிமைகள், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட எட்டு மணிநேர வேலை ஆகியவற்றுக்கு எதிராக உள்ளதாக அவை தெரிவித்துள்ளன.

தொழிலாளர் சட்டத்திருத்தங்கள் குறித்த மாநில வாரியான விவரங்கள்:

உத்தரப் பிரதேசம்

நாட்டில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம் மற்ற அனைத்து மாநிலங்களையும் ஒப்பிடுகையில், அடுத்த மூன்றாண்டுகளுக்கு கிட்டத்தட்ட அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் இடைநிறுத்தி மிகுந்த தைரியமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அனைத்து தொழில்கள், தொழிற்சாலைகள், வணிகங்களுக்கு நான்கு தொழிலாளர் சட்டங்களைத் தவிர மற்ற அனைத்து வரம்பிலிருந்தும் மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளித்துள்ளது.

மேலும், "சில தொழிலாளர் கட்டளைச் சட்டத்திலிருந்து 2020ஆம் ஆண்டு தற்காலிக விலக்கு" என்ற தலைப்பிலும் உத்தரப் பிரதேச அரசு ஒரு ஆணை பிறப்பித்துள்ளது.

விலக்கு அளிக்கப்பட்ட 4 தொழிலாளர் சட்டங்கள்:

  1. கட்டடம், பிற கட்டுமான தொழிலாளர்கள் சட்டம் 1996
  2. தொழிலாளர்கள் இழப்பீட்டுச் சட்டம் 1923
  3. கொத்தடிமைத் தொழிலாளர்கள் அமைப்புச் (ஒழிப்பு) சட்டம் 1976
  4. 1936 ஊதியக் கொடுப்பனவுச் சட்டத்தின் பிரிவு 5இன் கீழ், சரியான நேரத்தில் ஊதியங்களைப் பெறுவதற்கான உரிமையை வழங்குவது.

மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் 72 மணி நேரம்வரை கூடுதல் பணி நேரமாகவும், வேலைநேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாகவும் அதிகரிக்க அனுமதியளித்தார்.

மேலும் மிக முக்கியத் தளர்வாக 50-க்கு குறைவான தொழிலாளர்கள் பணிபுரியும் நிறுவனங்களிலும், சிறு குறு வணிக நிறுவனங்களிலும் ஆய்வுகள் நடத்தப்படாது. தொழிலாளர் ஆணையரின் அனுமதியுடன் அல்லது புகார்களின் அடிப்படையில் மட்டுமே ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்

பணி நேரத்தை 8 மணிநேரத்திலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவதைத் தவிர, வேறு சில தளர்வுகளுடன் தொழிலாளர் சட்டத்தை திருத்தியுள்ளது.

மகாராஷ்டிரா

பல்வேறு தொழிலாளர் சட்டங்களின்கீழ் அளிக்கப்படும் பல வருமானங்களுக்குப் பதிலாக, அனைத்துக் கடைகள், தொழிற்சாலைகளின் ஒருங்கிணைந்த வருடாந்திர வருமானத்தை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

கேரளா

முதலீட்டாளர்கள் வழிமுறைகளை ஓராண்டிற்குள் முடிக்க ஒப்புக்கொண்டால், விண்ணப்பம் தாக்கல்செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள் தொழில் துறை உரிமத்தை வழங்கும் எனக் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப்

கோவிட் -19 பெருந்தொற்றினால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க நிறுவனங்களுக்கு உதவும் முயற்சியில், தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதிய உயர்வு அறிவிக்கும் உத்தரவை மாற்றியமைத்த முதல் மாநிலமாக பஞ்சாப் மாறியுள்ளது.

மேலும், கடந்த மாதத்தில் வேலை நேரத்தை ஒவ்வொரு நாளும் 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாகவும், ஒவ்வொரு வாரமும் 48 மணி நேரத்திலிருந்து 72 மணி நேரமாகவும் அதிகரிக்கக் கோரிய தொழிற்சாலைச் சட்டங்களில் திருத்தம் செய்துள்ளது.

கர்நாடகா

கர்நாடக அரசும் அகவிலைப்படியை உயர்த்துவதற்கான தனது முடிவை திரும்பப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாநில அரசு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இமாச்சலப் பிரதேசம்

ஒரு நாளைக்கு 12 மணிநேரம் அல்லது வாரத்திற்கு 72 மணிநேரமாக வேலைகளை மாற்றுவதற்கு நிர்வாக உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.

குஜராத்

குஜராத்தில் குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழிலாளர்களின் இழப்பீட்டுச் சட்டம் தவிர அனைத்து தொழிலாளர் சட்டங்களும் குறைந்தது 1,200 நாள்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

அஸ்ஸாம்

நிறுவனம், தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நிலையான கால வேலைவாய்ப்பை அறிமுகப்படுத்த முன்மொழிந்துள்ளது அஸ்ஸாம் அரசு.

மேலும், தொழிற்சாலைகள், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிர்வகிக்கும் சட்ட வரம்பிலிருந்து அதிகமான நிறுவனங்களை எடுக்க முற்படுகிறது. தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை அதிகபட்சம் 8 மணி முதல் 12 மணி வரை அதிகரிக்க மாநில அரசு அறிவித்துள்ளது.

ஒடிசா

தொழிலாளர் அமைப்புகளின் எதிர்ப்புக்கு மத்தியில் 1948ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் சட்டத்தை மாற்றியமைப்பதன் மூலம் ஒடிசா அரசு தினசரி வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றியுள்ளது.

இந்தியாவில் தொழிலாளர் சட்டங்கள்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மத்திய சட்டங்களை நான்கு குறியீடுகளாக நெறிப்படுத்த முடிவு செய்யும்வரை, நாட்டில் சுமார் 50 மத்திய, 200-க்கும் மேற்பட்ட மாநில அளவிலான தொழிலாளர் சட்டங்கள் இருந்தன. அவை:

1. தொழில் துறை உறவுகள்

2. ஊதியங்கள்

3. சமூகப் பாதுகாப்பு

4. தொழில் பாதுகாப்பு

இதில் கடைசி மூன்றும் சட்டமாக்கப்பட்டுள்ளன. முதல் ஒன்றுக்கு வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தொழிலாளர்களுக்காக மத்திய-மாநில அரசுகள் சட்டங்களை வகுக்க முடியும்.

ஒரே விஷயத்தில் ஒரு மத்திய, மாநில சட்டங்களுக்கு இடையில் ஏதேனும் மோதல் ஏற்பட்டால், மத்திய சட்டமே மேலோங்கும். இடைநீக்கம் செய்ய முயன்ற சில சட்டங்கள் மத்திய அரசின் எதிர்ப்பைக் கொண்டிருந்தால், இடைநீக்கம் சட்ட சவாலுக்கு தயாராக இருக்கும்.

இந்தியாவின் சில முக்கியமான தொழிலாளர் சட்டங்களையும், வேலை தொடர்பான சட்டங்களையும் காணலாம்.

தொழிற்சாலைகள் சட்டம், 1948

இது தொழிற்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும், தொழிலாளர்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் மேம்படுத்தவும் முயல்கிறது.

கடைகள், வணிக நிறுவனங்கள் சட்டம்

வேலை நேரம், ஊதியம், கூடுதல் நேரம், ஊதியத்துடன் ஒரு வார விடுமுறை, ஊதியத்துடன் பிற விடுமுறைகள், வருடாந்திர விடுமுறை, குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, பெண்களின் வேலைவாய்ப்பு ஆகியவற்றை இது கட்டுப்படுத்துகிறது.

ஒப்பந்தத் தொழிலாளர் (ஒழுங்குமுறை மற்றும் ஒழிப்பு) சட்டம், 1970

ஒப்பந்தத் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதையும், சிறந்த வேலை நிலைமைகளை அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அடுத்து ஊதியம், வேலைவாய்ப்பு பாதுகாப்பு மற்றும் தொழில் துறை உறவுகள் தொடர்பான சட்டங்களைப் பார்க்கலாம்.

குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948

இது மற்ற தொழிலாளர் சட்டங்களைவிட அதிக தொழிலாளர்களை உள்ளடக்கியது.

தொழில்துறை சச்சரவுகள் சட்டம் 1947

பணிநீக்கம் மற்றும் தொழில்துறை நிறுவனங்களை மூடுவது, வேலைநிறுத்தங்கள், முழு அடைப்பு போன்ற சேவை விதிகளுடன் தொடர்புடையது.

தொழில்துறை ஸ்தாபனங்கள் (நிலையான ஒழுங்கு) சட்டம் 1946

இந்தச் சட்டத்தின்படி நிறுவனங்களின் முதலாளிகள் தங்களின்கீழ் உள்ள வேலைவாய்ப்பு நிலைமைகளை முறையாக வரையறுத்து அதன் சான்றிதழுக்காக அதிகாரத்தை அளிக்கும் வரைவு நிலை உத்தரவுகளைச் சமர்ப்பிக்க வேண்டும்.

சமூக பாதுகாப்புத் தொடர்பான சட்டங்கள் குறித்துக் காணலாம்.

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதிச் சட்டம், 1952

இதன்படி, தொழிற்சாலைகள், பிற நிறுவனங்களில் உள்ள ஊழியர்களுக்கான வருங்கால வைப்புநிதி, ஓய்வூதிய நிதி, காப்பீட்டு நிதியை வழங்க வழிவகை செய்கிறது.

தொழிலாளர்களின் இழப்பீட்டுச் சட்டம் 1923

பணியின்போது ஏற்படும் விபத்து, இறப்பு ஆகியவற்றின் விளைவால் தொழிலாளர்கள், அவர்களை சார்ந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க இது வழிவகை செய்கிறது.

ஊழியர்கள் மாநில காப்பீட்டுச் சட்டம், 1948

நோய், மகப்பேறு மற்றும் ‘பணியின்போது ஏற்படும் காயம்’ போன்றவற்றில் ஊழியர்களுக்கு சில சலுகைகளை வழங்குவதையும், வேறு சில ஏற்பாடுகளை செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இடைநீக்க தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களை எவ்வாறு பாதிக்கின்றன?

இந்தத் தொழிலாளர் சட்டங்கள் சமரசம் செய்யப்பட்டாலோ, இடைநீக்கம் செய்யப்பட்டாலோ அல்லது நீக்கப்பட்டாலோ, தொழிலாளர்கள் தங்கள் முதலாளிகளால் சுரண்டப்பபட்டு மிகவும் பாதிக்கப்படுவார்கள். இத்தகைய சூழ்நிலைகளில், பெரும்பாலான வேலைவாய்ப்பு முறைசாரா முறையில் மாறும், ஊதிய விகிதத்தை கடுமையாகக் குறைக்கும். இதனால் எந்தவொரு தொழிலாளியும் குறைதீர்க்கும் வழியைக்கூட பெற முடியாது.

இது தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம், தொழிலாளர்களின் பணி நிலைமைகள், தொழில் துறை மோதல்களைத் தீர்ப்பது, தொழிற்சங்கங்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், குடிபெயர்ந்த தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்கள் உள்பட ஒரு பெரிய அளவில் தொழிலாளர்களின் பாதுகாப்பைப் பாதிக்கும்.

இந்தியா ஏற்கனவே உலகின் மலிவான, மிகவும் சுரண்டப்பட்ட தொழிலாளர் சக்திகளில் ஒன்றாகும். தொழிலாளர் செலவுகள் இந்தியாவில் மொத்த தொழில் துறை செலவினங்களில் ஒப்பீட்டளவில் சிறிய விகிதத்தில் உள்ளன. 2017-18ஆம் ஆண்டில் தொழில்களின் வருடாந்திர கணக்கெடுப்பின்படி, தொழிலாளர்களுக்கான ஊதியம் ஒட்டுமொத்த இந்தியாவிற்கான மொத்த உள்ளீட்டுச் செலவில் மூன்று விழுக்காட்டிற்கும் குறைவாகவே இருந்தது. இதில் உத்தரப் பிரதேசம் மூன்று விழுக்காடாகவும், குஜராத், மத்தியப் பிரதேசம் இரண்டு விழுக்காடாகவும் உள்ளன.

தொழிலாளர் சட்டங்களில் சமரசம் ஏன்?

வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும் அதை சீனாவிலிருந்து இந்தியாவுக்கு மாற்றுவதற்கும் தொழிலாளர் சட்டங்கள் சமரசம் செய்தன. உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தில் தொழிலாளர் சட்டங்களை நிறுத்துவதற்கான உத்தரவுகளை அறிவிப்பதற்கு முன்பு, சீர்த்திருத்தங்களை உறுதியளித்தார்.

மேலும், சீனாவிலுள்ள முதலீட்டை தங்களது மாநிலத்துக்கு மாற்றவும், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பல நிறுவனங்களுடன் காணொலி வாயிலாக மாநாடு நடத்தினார்.

மத்திய அரசும் இதே வழியில் செயல்படுகிறது. இது சமீபத்தில், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கான கட்டமைப்பு தொழிலாளர் சீர்த்திருத்தங்களுக்கு ஆதரவாக வெளிவந்தது. எவ்வாறாயினும், இத்தகைய மாற்றங்கள் உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாட்டிலிருந்து இந்தியாவிற்கு முதலீட்டைத் திசைதிருப்புமா என்பதைக் காலம் மட்டுமே சொல்லும்.

கடந்த ஆறு ஆண்டுகளில் சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வங்கி சாராத நிதித் துறையில் சிக்கல், பலவீனமான கிராமப்புற வருமான வளர்ச்சி வரிசையில் வகைப்படுத்துகிறது.

இதன் காரணமாக நடப்பு நிதியாண்டிற்கான மதிப்பீடு 4.8 விழுக்காடாக உள்ளது. இதற்கிடையில் பொதுஅடைப்பு காரணமாக நாட்டின் பொருளாதாரம் இன்னமும் சுருங்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. நடப்பாண்டின் மார்ச் மாதம் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 0.4 ஆக சுருங்கிவிட்டது.

இந்த நெருக்கடியான நேரத்தில் கனடா, இங்கிலாந்து, வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளும் தொழிலாளர் சட்டங்களில் சீர்த்திருத்தங்கள் கொண்டுவந்துள்ளன.

கனடா, இங்கிலாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் முதலாளிகளுக்கு கைகொடுக்கும் வகையில் சில நிதித்தொகுப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வியட்நாமில் வேலைக்குச் செல்லாமல் மூன்று மாதங்களாக வீட்டில் ஓய்வெடுத்த தொழிலாளிகளுக்கும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வங்கதேசத்தில் 89.45 மில்லியன் டாலர் வருமானத்தை தொழிலாளர்கள் இழந்துள்ளனர். இந்த மாற்றங்கள் தற்காலிகமானவையா அல்லது நிரந்தரமாக முடிவடைகிறதா? என்பதைக் காலமே தீர்மானிக்கும்!

இதையும் படிங்க: கரோனா நெருக்கடியில் தொழிலாளர்களைச் சுரண்டுவதை ஏற்க முடியாது: ராகுல் காந்தி

Last Updated : May 15, 2020, 1:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details