கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கடினமாக ஈடுபட்ட கேரள அரசு, தற்போது அதன் பயனை அனுபவிக்கத் தொடங்கியிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே. சைலஜா தெரிவித்துள்ளார். தற்போது கரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் 138 பேர் எனவும்; கடந்த வாரங்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கங்களில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேரளா மாநிலம் முழுவதும் 78 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் பேசியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'கேரள அரசு எவ்விதத்திலும் ஓய்வெடுக்க முடியாது. நாம் எச்சரிக்கையுடன் இல்லையென்றால் நிலைமை எப்போது வேண்டுமானாலும் மோசமடையலாம். அதேநேரத்தில், வேறு பிரச்னைகள் எதுவும் நிகழ்ந்து விடக்கூடாது. கரோனாவிலிருந்து நாம் பாதுகாத்த மக்களை பசியால் இறக்க செய்துவிடக்கூடாது.
ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பிறகு, மத்திய அரசு சில தொழில் நடவடிக்கைகளுக்கு ஊரடங்கு உத்தரவிலிருந்து விலக்கு அளித்திருந்தாலும், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். மக்கள் பொருளாதார நெருக்கடிகளைச் சமாளிப்பதற்காக மட்டுமே இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் மக்கள் பாதுகாப்பு உபகரணங்களையும், தனி நபர் விலகலையும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்" என்றார்.
மேலும், "கேரளாவில் உள்ள 14 மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையை வைத்து நான்கு மண்டலங்களாாக பிரித்திருப்பது ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பிறகும் அமலில் இருக்கும். இடுக்கி மற்றும் கோட்டயத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கு உத்தரவிலிருந்து அதிகபட்ச விலக்கு அளிக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:மணிப்பூர் பெண் மீது எச்சில் துப்பிய இளைஞர் கைது!