தேசியக் கல்விக் கொள்கை 2019 ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டது. இணையத்தில் ஈசிரீட்(easyread) என்ற தளம் உள்ளது. அதில் இந்த தேசிய கல்விக் கொள்கை 2019இன் ஆங்கில வடிவத்தை படிக்க கடின அளவு (Difficulty Level) 21ஆக தரப்பட்டுள்ளது. அதாவது 484 பக்கங்கள்கொண்ட இந்த வரைவின் ஆங்கில வடிவத்தைத் தெளிவாகப் படிக்கக் குறைந்தபட்சம் முதுகலைப் பட்டம் படித்திருக்க வேண்டும். மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் மத்திய அரசு இந்தி, ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் மட்டுமே இந்த வரைவை வெளியிட்டிருப்பது முதல் முரண். இந்த தேசிய கல்விக் கொள்கை மற்ற பிராந்திய மொழிகளில் வெளியிடப்படவில்லை.
தேசிய கல்விக் கொள்கையின் வரைவு மட்டும் 51 பக்கங்களில் தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கடினமான சொல்லாடல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த வரைவுக் கொள்கையின் மீது பொதுமக்கள் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்க வெறும் ஒரு மாதம் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. பின்னர், ஏராளமான கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரது வலியுறுத்தலின் பேரில் கால அவகாசம் மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகே பாரதி புத்தக ஆலயத்தின் முயற்சியால் இந்த வரைவு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. (மற்ற பிராந்திய மொழிகளுக்கு இந்த வாய்ப்பும் இல்லை) அதன்பிறகே தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களுக்கு அதைப்படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் சுமார் 500 பக்கங்களைக் கொண்ட இந்த வரைவை ஆழ்ந்து படித்து அலசி ஆராய்ந்து கருத்து தெரிவிக்க இப்போது கொடுக்கப்பட்டிருக்கும் அவகாசமும் போதாது. இந்த அவகாசமும் நாளையோடு (30.07.2019) முடிவடையவுள்ள நிலையில், அவகாசத்தை மேலும் நீட்டிக்கும்படி கோரிக்கை வைக்க வேண்டும் என்றாலும், சமூகத்தின் பின்தங்கிய மாணவர்களின் கல்வி தடைபடாதிருக்க உங்கள் கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்றாலும், உடனடியாக mhrd.gov.in என்ற இணையதளத்தில் பதிவிடுங்கள்.
இந்த புதிய தேசிய கல்விக் கொள்கை 2019, பொதுமக்களுக்கு எதிரான ஒன்று என்பது ஆளும் பாஜக அரசுக்குத் தெளிவாகத் தெரியும் போலும். அதனால்தான் 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வரைவைத் தேர்தல் முடியும்வரை மத்திய அரசு வெளியிடவில்லை. தேர்தலில் வெற்றிபெற்று புதிய அமைச்சரவை பதவியேற்ற முதல் வாரத்திலேயே இந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த கல்விக் கொள்கை வரைவின் தொடக்க பக்கத்தில் 2018ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த பிரகாஷ் ஜவடேகரின் கையெழுத்துதான் இருக்கிறதே தவிர தற்போதைய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலின் கையெழுத்து இல்லை.
சரி இப்போது கல்விக் கொள்கை வரைவுக்கு வருவோம். பொதுமக்களின் கருத்துக் கேட்புக்கு விடப்பட்டுள்ள இந்த வரைவைப் பற்றி கருத்துக் கூறி நடிகர் சூர்யாவின் மீது தொடுக்கப்பட்ட முதல் கேள்விக் கணை, கருத்துச் சொல்ல அவருக்கு என்ன தகுதியுள்ளது என்பது. அகரம் அறக்கட்டளை மூலம் அவர் செய்துவரும் தொண்டுகள் என்பதையெல்லாம் தாண்டி இந்தச் சமூகத்தில் அவரும் ஒருவர் என்ற ஒரு தகுதியே சூர்யாவுக்கு போதும். அதைத் தாண்டி அவரிடம் என்ன தகுதி எதிர்பார்க்கப்படுகிறது என தெரியவில்லை.
சூர்யாவின் தகுதியைப் பற்றி விமர்சிப்பவர்களிடம் ஒரு சந்தேகம், 'கிரிக்கெட்டின் கடவுள்' என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரை கபடி ஆட வைத்தால் தனது தலைசிறந்த ஆட்டத்தை அவரால் வெளிப்படுத்த முடியுமா? அதே போலத்தான் கஸ்தூரி ரங்கன் என்ற ஒரு அறிவியல் அறிஞரால் எப்படி பல கோடி குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கல்விக் கொள்கையைச் சிறந்த முறையில் தர இயலும்.
கஸ்தூரி ரங்கன் ஒரு அறிவார்ந்த நபர், தலைசிறந்த அறிவியல் அறிஞர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் கல்வித் துறையில் பெரிய அனுபவம் இல்லாத அவரால் எப்படி சிறந்த வரைவைத் தர இயலும். சூர்யாவின் தகுதி குறித்து கேள்வி எழுப்பவர்களிடம் மற்றொரு கேள்வி இருக்கிறது, தேசிய கல்விக் கொள்கை வரைவை முடிவு செய்ய கஸ்தூரி ரங்கனுக்கு கல்வியாளர் என்ற தகுதி இருக்கிறதா என்ன? மேலும் இது தொடர்பாக ஏபிவிபி என்ற ஒரு மாணவர் அமைப்பிடம் மட்டும் கலந்தாலோசித்தது ஏன்?
நடிகர் சூர்யா எழுப்பிய மற்றொரு மிக முக்கிய கேள்வி, தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த ஏன் இவ்வளவு அவசரம்?
அதற்கு பாஜகவிடமிருந்து வரும் அறிவார்ந்த (?) விளக்கம், 2015இல் டிஎஸ்ஆர் சுப்பிரமணியன் தலைமையிலான குழு 2016இல் வரைவை சமர்ப்பித்ததாகவும் அதன் தொடர்ச்சியாக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான குழு தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்ததாகவும் கூறுகின்றனர்.
ஆனால் பாஜக அரசு அவசரம் காட்டுவது அங்கு இல்லை. பதவி ஏற்ற ஒரு வாரத்திற்குள் கேபினட் ஒப்புதல் பெறும் வழக்கத்திற்கு குட்பை சொல்லிவிட்டு உடனடியாக அதை செயல்படுத்த ஏன் இவ்வளவு அவசரம் காட்டப்படுகிறது?