கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகிறது. இம்மாதிரியான சூழலில் நோய்களுக்குப் பெயர் எப்படி வைக்கிறார்கள் என்ற சந்தேகம் உங்கள் மனதில் எழலாம். வைரஸ்களுக்கும், நோய்களுக்கும் பெயர் வைப்பதற்கு சில வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. வைரஸ்களுக்கு மரபணு அமைப்பின் அடிப்படையில் வைரஸ்கள் வகைப் பிரித்தல் தொடர்பான சர்வதேச குழுப் பெயர் சூட்டுகிறது. அதேபோன்று, நோய்களுக்கு உலக சுகாதார அமைப்பு பெயர் வைக்கிறது.
நோயின் ஒற்றுமைகளைக் கண்டறிவதற்கு முன்பு கரோனா வைரஸ் நோய்க்கு, 2019 - nCoV என்ற தற்காலிகப் பெயர் சூட்டப்பட்டது. வைரஸ், நோயின் அதிகாரப்பூர்வப் பெயரை உலக சுகாதார அமைப்பு, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி வெளியிட்டது. நோயின் பெயர் கோவிட் - 19 எனவும், அதன் விரிவாக்கம் கரோனா வைரஸ் நோய் எனவும், உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு, சீனாவின் வூஹான் மாகாணத்தில் நோய்ப் பரவ தொடங்கியதால், ஆண்டை குறிக்கும் வகையில் பெயரில் 19 என்ற எண் குறிப்பிடப்பட்டுள்ளது. சார்ஸ் கரோனா வைரஸ் 2 என்ற வைரஸ்தான் இந்நோய்க்கு காரணியாக உள்ளது. எனவே, சாரஸ் - கோவிட் - 2 என்ற பெயர் இந்நோய்க்கு உள்ளது.
இந்தப் பெயரை பயன்படுத்தினால் சார்ஸ் நோய் குறித்த அச்ச உணர்வு, மக்களுக்கு ஏற்படும் என்ற காரணத்தால் கோவிட் - 19 என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு பயன்படுத்துகிறது. கடந்த 2003ஆம் ஆண்டு சார்ஸ் நோய் ஆசியக் கண்டத்தை உலுக்கி எடுத்தது. கரோனா, நாவல் கரோனா, கரோனா வைரஸ் என பல பெயர்கள் பயன்படுத்தப்படுவதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள்.