அண்ணல் காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாளான ஜனவரி 30ஆம் தேதி 1948 ஆம் ஆண்டு நாடு முழுவதும் பெரும் துயரத்திலும், அதிர்ச்சியிலும் இருந்தது. அப்போது சுதந்திரம் பெற்று ஜந்தரை மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், இந்தியா ஒரு பச்சிளம் ஜனநாயகமாகவே இருந்தது. அந்நியரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்ட தன் குடும்பத்துடன் செலவழிக்க காந்திக்கு சிறிது காலமே வழங்கப்பட்டது. சாதி, மதம், எல்லை ஆகியவற்றைக் கடந்த காந்தியின் குடும்பம் உலகில் மிகப் பெரியது. காந்தி படுகொலை செய்யப்பட்ட நாளன்று 33 கோடி இந்தியர்கள் உணவு அருந்தாமல் தூங்கச் சென்றனர். அந்த காலத்தில் செய்திகளை விரைந்து தரும் ரேடியோ துக்கம் நிறைந்த பாடல்களை ஒலித்துக் கொண்டிருந்தது.
சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிவிட்டு வீடு திரும்பியபோது, அந்த துக்கத்தை உடனடியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், மாணவர்கள் சிலர் மகிழ்ச்சியாக இருந்தனர். அந்த இரவு முழுவதும், குழந்தைகளின் பெற்றோர் ரேடியோ முன் அமர்ந்து அழுது கொண்டிருந்தனர். இந்தியர்களின் வீட்டில் துக்கத்தின் காரணமாக உணவு சமைக்கப்படவில்லை, பெற்றோர்கள் அனைவரும் நோன்பு கடைபிடித்தார்கள். ரேடியோவில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய "ஒளி நம்மை விட்டுச் சென்றது" என்ற உரையை கேட்டு அனைவரும் கண்ணீர் விட்டு அழுதனர். அனைத்து இந்தியர்களின் வீடுகளிலும் அந்த நாளில் இருள் சூழ்ந்தது. அகில இந்திய வானொலியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட காந்தியின் இறுதி சடங்குக்கு சமேல்வில்லி டி மேல்லோ வர்ணனை செய்தார். இதனைக் கேட்டு மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
காந்தி இறந்து 71 ஆண்டுகள் ஆகிவிட்டது, இப்போது 'அவர் நமக்கு என்ன உணர்த்துகிறார்' என்ற வழக்கத்திற்கு மாறான கேள்வி எழுகிறது. இன்றைய இந்தியாவில் பெரும்பாலான மக்கள் காந்தியைப் பற்றி முழுவதுமாக அறிந்திருக்கமாட்டார்கள். எனினும் இந்த கேள்வி எழுப்பப்படுகிறது. தேசத் தந்தையான காந்தியடிகளின் மதிப்பை அறிவதற்கு கடந்த 71 ஆண்டுகளில் அரிதாக ஒன்று கூடியிருக்கிறோம். சமூக, கலாசார ரீதியாக பிளவுபட்டுள்ள இந்தியா, தற்போதும் முன்னேறிவரும் நாடுகளின் பட்டியலில்தான் இருக்கிறது. அமெரிக்காவைக் காட்டிலும் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் பெரும்பாலான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ்தான் வாழ்ந்து வருகின்றனர். இதற்கு மாறாக, சில இந்தியர்கள் செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ரோமன் ரோலண்ட் காந்தியை தேவதூதர் என குறிப்பிடுகிறார். இயேசு கிறிஸ்துவைக் காட்டிலும் காந்தி அதிகப்படியான துயரம், வேதனை ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார். இதிகாசங்களில் வரும் கதாநாயகன்கள்போல தர்மத்தை நிலைநாட்ட கடுமையாக உழைத்தவர் காந்தி. காந்தியின் மதமானது ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கானது.
உண்மையான பொருளாதாரம் சமூக நீதியை உள்ளடக்கியது, பலவீனமானவர்களை முன்னேற்றுவதே சுதந்திரமாகும். அரசு நிர்வாகத்தில் இருக்கும் அலுவலர்கள் சேவை மனப்பாங்கைப் பெற்றிருக்க வேண்டும், எளிமையாக வாழ வேண்டும் என காந்தி நினைத்ததாக, எர்னஸ்ட் பார்க்கர் தெரிவிக்கிறார். காந்தியின் இந்த எண்ணம் நவீன இந்தியாவில் விசித்திரமாகக் கருதப்படலாம். தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு ஈடாக பெரும் தலைவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படுகிறது. அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு காந்தி பெரிய பொருட்டாக என்றுமே இருந்ததில்லை. ஆனால், உலகம் முழுவதும் உள்ள மக்கள், காந்தியை பெரிதும் மதிக்கின்றனர். ஏனெனில், அன்புக்கு செயல் வடிவம் கொடுத்து மனிதநேயத்திற்காக வாழ்ந்தவர் அண்ணல் காந்தியடிகள்.