ஜமாத் உல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் (ஜே.எம்.பி.) முக்கியப் புள்ளி சலாவுதீனுக்கு அடுத்தபடியாக அப்துல் கரீம் (போரோ கரீம்) செயல்பட்டுவந்தார். இந்நிலையில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் ஜங்கிப்பூர் பகுதியில் கொல்கத்தா காவல் துறையின் சிறப்புப் படை அப்துல் கரீமை கைதுசெய்தது. மேலும், அவரை இன்றே நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
ஜமாத் உல் முஜாஹிதீன் அமைப்பு
மேற்கு வங்கத்தில் செயல்படத் தொடங்கிய இந்த அமைப்பு, தற்போது இந்தியா முழுவதும் பரவியுள்ளது. புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் 130-க்கும் மேற்பட்டோர் ஜே.எம்.பி. அமைப்பின் தலைமையுடன் தொடர்ச்சியாகத் தொடர்பில் இருப்பது தெரியவந்தது.
இந்த அமைப்பு பிகாரின் புத்த கயா பகுதியில் 2013ஆம் ஆண்டு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. இதில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், பலர் காயமடைந்தனர்.
மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் வீடு ஒன்றில் ஜே.எம்.பி. அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டுகள் தயாரித்தபோது, திடீரென குண்டுகள் வெடித்து சிதறியதில் இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இவ்வமைப்பின் முக்கியப் புள்ளி அப்துல் கரீமை கைதுசெய்திருப்பது மேற்கு வங்க மக்களிடையே ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ரகசியக் கூட்டம் நடத்தும் அதிருப்தி எம்.எல்.ஏக்கள்: கர்நாடக பாஜகவில் பிளவு!