மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கருக்கும் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையேயான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. அம்மாநில ஆளுநராக கெகதீப் பதவியேற்ற நாள் முதலே இருவருக்குமான மோதல் தொடங்கிய நிலையில், நாளுக்கு நாள் இது அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
மாநில பல்கலைகழகங்களின் துணைவேந்தர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்கு மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை என ஆளுநர் குற்றஞ்சாட்டிவருகிறார். மேலும், இந்த மோதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நேற்று (ஜூலை 21) ஜெகதீப் முறையிட்டுள்ளார்.
இந்நிலையில், மத்திய அரசிடமும் ஆளுநரிடமும் மோதல் போக்குடன் செயல்படுவதை விடுத்து, அரசியல் சாசனத்தை மதித்து மக்கள் பணி மேற்கொள்வதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி கவனம் செலுத்த வேண்டும் என ஆளுநர் ஜெகதீப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அடுத்தாண்டில் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் மம்தா பானர்ஜி அரசை எப்படியேனும் வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பாஜக தீவிரமாக செயல்பட்டுவருவதால், இனிவரும் காலங்களில் இந்த மோதல் போக்கு மேலும் உக்கிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:தங்கக் கடத்தல் விவகாரம்: நெருக்கடியில் கேரள முதலமைச்சர்