தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவால் உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய நள்ளிரவு வரை காத்திருந்த மகன்கள் - கரோனா பரிசோதனை செய்வதில் காலதாமதம்

கொல்கத்தா: கரோனாவால் உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது மகன்கள் நள்ளிரவு வரை காத்திருந்து தங்களது வீட்டிலேயே உடலை அடக்கம் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

west-bengal-family-forced-to-bury-covid-victim-outside-their-home
west-bengal-family-forced-to-bury-covid-victim-outside-their-home

By

Published : Jul 27, 2020, 4:42 PM IST

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மெடினிப்பூர் மாவட்டம் கொல்காட் கிராமத்தைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் உள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர் இவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் தொற்று பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல அவசர ஊர்தி வருவதற்குள் மோசமான உடல் நிலையால் அந்த முதியவர் வீட்டிலேயே இறந்துவிட்டார்.

இறந்தவரின் உடலை அவசர ஊர்தியில் எடுத்து செல்ல முடியாது எனவும், சுகாதாரப் பணியாளர்கள் உதவியுடன் உடலை அடக்கம் செய்யுமாறும் அவசர ஊர்தி பணியாளர்கள் அறிவுறுத்தினர். ஆனால் சுகாதார பணியாளர்கள் இரண்டு பாதுகாப்பு கவசங்களை அளித்து முதியவரின் உடலை அவரது இரண்டு மகன்களே அடக்கம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து அருகிலுள்ள காட் கிராமத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் இது பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதி எனவும், இந்த இடத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை அடக்கம் செய்யக்கூடாது எனவும் கூறி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர், இரண்டு மகன்களும் முழு உடல் பாதுகாப்பு கவசங்களை அணிந்து, நள்ளிரவு வரை காத்திருந்து, தங்களது வீட்டின் வாயிலிலேயே தந்தையின் உடலை அடக்கம் செய்தனர்.

இறந்தவரால் குடும்பத்தில் உள்ள வேறு நபர்களுக்கு தொற்று பரவி இருக்கலாம் என சந்தேகமடைந்த அவர்கள், தங்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள சுகாதார பணியாளர்களுக்கு போன் செய்துள்ளனர். இருப்பினும், சுகாதார பணியாளர்கள் இவர்களது அழைப்பை ஏற்கவில்லை.

இந்நிலையில், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று கரோனா பரிசோதனை செய்யப்படும் என பஞ்சாயத்து அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details