மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திருணாமுல் காங்கிரஸ் - பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இதுதவிர கடந்த சில தினங்களாக அம்மாநில முதலமைச்சர் பிரதமர் மோடி குறித்து கடும் விமர்சனங்களை வைத்துவந்தார். அதற்கு இணையாக பாஜகவினரும் மம்தாவிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்துவந்தனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் கொல்கத்தா நகரில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா நேற்று மாலை பெரிய அளவிலான பேரணி நடத்தினார். கொல்கத்தாவின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற்ற இந்தப் பேரணி வித்யாசாகர் கல்லூரி அருகே நெருங்கியபோது, அங்கிருந்த திருணாமுல் காங்கிரசின் மாணவர் அமைப்பினர் அமித்ஷா, பாஜகவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அமித் ஷா வாகனத்தின் மீது கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். இதனால் அப்பகுதியில் பாஜக தொண்டர்கள், திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே வன்முறை வெடித்துக் கலவரமாக மாறியது. அங்கிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதோடு சில இடங்களில் அவற்றை தீயிட்டும் கொளுத்தினர்.
இந்த வன்முறை நடைபெற்றபோது, அமித்ஷா பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும் அப்பகுதி யுத்த களத்தைப் போன்று காட்சியளித்தது. மேலும் இச்சம்பவத்தின்போது கொல்கத்தா பல்கலைக்கழக வளாகத்திலிருந்த சமூக சீர்திருத்தவாதியான வித்யாசாகரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இந்தக் கலவரம் மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி சம்பவ இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் இச்சம்பவம் குறித்து பேசிய அமித் ஷா, மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு ஆதரவு பெருகிவருவதை பொறுத்துக்கொள்ள முடியாத திருணாமுல் காங்கிரஸ் இதுபோன்ற வன்முறையை நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், இந்தக் கலவரத்திற்கு மேற்குவங்க மக்கள் தங்களின் வாக்குகள் மூலமாக பதில் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.
அமித்ஷா பேரணியில் நடைபெற்ற கலவரத்தின் வீடியோ காட்சிகள் இச்சம்பவம் குறித்து டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய பொறுப்பாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான பாஜக அமைச்சர்கள், மேற்கு வங்க கலவரத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். மேலும், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தேர்தல் பரப்புரைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைவிடுத்தனர்.
இந்தக் கலவர சம்பவத்திற்கு உள்துறை அமைச்சர் ராஜ்நத் சிங் உள்ளிட்ட பல்வேறு பாஜகவினரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்னறனர்.