மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே பனிப்போர் தொடர்ந்து வருகிறது.
2011ஆம் ஆண்டில் தேர்தல் பரப்புரையில் 'போட்லா நொய், போடோல் சாய்' (மாற்றம் செய்வோம், பழிவாங்குதல் அல்ல) என்ற முழக்கத்தை முன்வைத்து தேர்தலைச் சந்தித்தார் மம்தா பானர்ஜி. அம்மாநிலத்தில் 34 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த சிபிஐ (எம்) தலைமையிலான அரசை வீழ்த்தி மம்தா முதலமைச்சரானார். பின்னர், பழிவாங்கும் எண்ணத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளதாக அக்கட்சியை சிபிஐ(எம்) எதிர்த்தது. அதற்கு பதிலடியாக, "மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக தான் ஆட்சி மாற்றம், பழிவாங்குவதற்கு அல்ல" என மம்தா கூறியிருந்தார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்த கருத்தை அடியோடு மாற்றி, “நாங்கள் ஆட்சிக்கு வந்தால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பழிவாங்கியே தீருவோம்” என்ற பொருளில் 'போட்லாவ் ஹோபி, போடோலோ ஹோபி' (மாற்றம் மட்டுமல்ல பழிவாங்கலும் நடைபெறும்) என பாஜகவின் மேற்கு வங்க மாநிலத் தலைவர் திலீப் கோஷ், தன்னுடைய முகநூல் பக்கத்தில் கருத்திட்டுள்ளார். இது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.