இந்திய ஆட்சிப்பணி (ஐஏஎஸ்), வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்), இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) ஆகிய இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வை மூன்று கட்டங்களாக ஆண்டுதோறும் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த 2020ஆம் ஆண்டுக்கான தேர்வு வரும் அக்டோபர் 4ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் இந்தியாவில் நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு எழுத வரும் தேர்வாளர்கள் கோவிட்-19 தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள குறிப்பில், "அனைத்து தேர்வாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். முகக்கவசம் அணியாதவர்கள் நிலையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கிருமி நாசினிகளை தேர்வாளர்கள் கொண்டு வர வேண்டும். தனி நபர் இடைவெளியை அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தேர்வு அறைகளுக்குள்ளும், அரங்க வளாகத்திலும் தனிப்பட்ட சுகாதார ஒழுங்கைப் பின்பற்ற வேண்டும். தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டவர்களின் வசதிக்காக கமிஷன் தனது இது குறித்த மேலதிகத் தகவல்களை இணையதளத்தில் (http://upsconline.nic.in) பதிவேற்றப்பட்டுள்ளது.