ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று திடீர் அறிவிப்பை வெளியிட்டார். கட்சித் தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத்தின் முக்கிய சகாவான ரகுவனஷ் பிரசாத்தின் இந்த அறிவிப்பு பிகார் அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ரகுவன்ஷ் பிரசாத் சிங் உடல்நிலை குறைவு காரணமாக டெல்லி எய்ம்எஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்நிலையில் அவருக்கு லாலு பிரசாத் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், 'ஊடகங்களில் வலம் வரும் உங்கள் ராஜினாமா கடிதத்தை என்னால் நம்பவே முடியவில்லை. நானும், எனது குடும்பமும், நமது கட்சியும் உங்களை சக அங்கமாகவே என்றும் பார்க்க விரும்புகிறோம். கடந்த நாற்பது ஆண்டுகளில் ஏராளமான அரசியல், சமூக, குடும்ப பிரச்னைகளை நாம் கலந்து பேசி எதிர்கொண்டுள்ளோம். நீங்கள் எங்கும் செல்ல முடியாது. இதை புரிந்துகொள்ளுங்கள்' என லாலு தெரித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் ரகுவன்ஷ் பிரசாத்தின் இந்த அறிவிப்பு லாலு கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜகடாநந்த் சிங்குக்கும் ரகுவன்ஷுக்கும் கருத்து வேறுபாடு எனவும், லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்த ரமா சிங் ராஷ்டிரிய ஜனதாதள கட்சியில் புதிதாக சேர்ந்தது ரகுவன்ஷ்க்கு பிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:பெய்ரூட்டில் மீண்டும் ஒரு பெரும் தீ விபத்து - பீதியில் லெபனான் மக்கள்!