கடந்த வாரம் லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நாடு முழுவதும் சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், சீன நிறுவனங்களுடன் கையெழுத்திடப்பட்ட மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை நிறுத்தி வைப்பதாக மகாராஷ்டிரா அரசு நேற்று (22-06-2020) தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று (23-06-2020) செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார், ”நமக்கு எதிராக தவறு செய்யும் நாட்டிற்கு எதிராக நாம் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இந்தியர்கள் சீன தயாரிப்புகளை பயன்படுத்தக்கூடாது. 125 கோடி மக்கள்தொகை கொண்ட நாம் சீனத் தயாரிப்புகளை புறக்கணித்தால், சீனாவின் ஆட்டம் முடிந்துவிடும்” எனத் தெரிவித்தார்.