நாட்டின் தலைநகர் பகுதியில் காற்று மாசு அபாயகரமான அளவை எட்டியுள்ளது. டெல்லியின் பல பகுதிகளில் காற்று தர அளவீடு 450-க்கு மேல் உள்ளது. காற்று மாசு காரணமாகத் தலைநகர் பகுதியிலுள்ள பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. அபாயகரமான அளவை எட்டியுள்ள காற்று மாசு குறித்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், "எந்த மாநிலத்திலும் இனி விவசாயக்கழிவுகள் எரிக்கக் கூடாது. இதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும். இனிமேலும் இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்தால் விவசாயிகள் மீது மட்டுமல்லாமல் தலைமைச் செயலர் முதல் பஞ்சாயத்து அலுவலர் வரை அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
நாகரிகமடைந்த எந்தவொரு நாட்டிலும் இப்படி இருக்காது. விவசாயிகளுக்குச் சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் அதற்காக அவர்கள் காற்றை அசுத்தப்படுத்த அனுமதிக்க முடியாது. உங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பறிக்கொள்ள மற்றவர்களை அழிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இனி காற்று மாசு ஏற்படக் காரணமாக உள்ள விவசாயிகள் மீது கண்டிப்பாகக் கருணை காட்டமாட்டோம்" என்று எச்சரித்தனர்.