சிறுபான்மையினர் உரிமைகள் தினம் இன்று (டிசம்பர் 18) கடைபிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு செய்தி வெளியிட்டுள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட மக்களின் உரிமைகளை காப்பாற்றுவது நமது கடமை என தெரிவித்துள்ளார்.
வேற்றுமையில் ஒற்றுமை
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சிறுபான்மையினர் உரிமைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. வேற்றுமையில் ஒற்றுமையை போற்றும் இந்தியாவில் சமூகம், சாதி, இனம் என பல்வேறு நம்பிக்கைகள் கொண்ட மக்களின் உரிமையை காப்பது நமது கடமை. மத நல்லிணக்கத்தில் நமக்கு நம்பிக்கை உள்ளது. ஒற்றுமையே வலிமை. பிரிந்தால் தோல்வியை தழுவுவோம்" என பதிவிட்டுள்ளார்.
அக்யஸ்ரீ என்ற திட்டத்தின் மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கு மேற்குவங்க அரசு உதவித்தொகை வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "2011ஆம் ஆண்டிலிருந்து, நாட்டிலேயே அதிகப்படியாக, 2.03 சிறுபான்மையின மாணவர்களுக்கு 5,657 கோடி ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டுவருகிறது" என்றார்.