தலைநகர் டெல்லியில் கரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் விளைவாக, டெல்லியிலுள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் டெல்லிவாசிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னதாக உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்த நிலையில், டெல்லி அரசு அறிவித்த இந்த உத்தரவை அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜல் ரத்து செய்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்ட அவர், "நோயாளிகளிடையே பாகுபாடு காட்டுவதைவிட, போதுமான உள்கட்டமைப்பை திட்டமிட்டு உருவாக்குவதே அரசாங்கத்தின் குறிக்கோளாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் இந்தியர்கள், டெல்லி அனைவருக்கும் சொந்தமானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.