கேரளா மாநிலம் ஆலப்புழாவில் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் புதிய வாட்டர் டாக்சி மற்றும் கேடமரன் குரூஸ் படகு சேவைகளை முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கிவைத்தார்.
முதற்கட்டமாக நீர் போக்குவரத்துத் துறை 3.14 கோடி ரூபாய் செலவில் நான்கு வாட்டர் டாக்சி படகுகளை அமைத்துள்ளது. இந்தப் படகுகளில் பத்து பேர் வரை பயணிக்கலாம்.
சுற்றுலாத்தளம் அதிகமுள்ள ஆலப்புழா பகுதியில் சுற்றுலாப்பயணிகள் விரும்பும் இடத்திற்கு மிக விரைவில் வாட்டர் டாக்சி படகில் சென்றடைய முடியும். இந்தப் படகில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு அசம்பாவிதம் ஏற்பட்டால் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மணிக்கு ஆயிரத்து 500 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று புதிதாக தொடங்கப்பட்ட கேடமரன் படகுகளில் 100 பேர் வரை பயணிக்கலாம். அதிநவீன முறையில் தயாரிக்கப்பட்ட இந்த படகு 20.5 மீட்டர் நீளமும். ஏழு மீட்டர் அகலமும் கொண்டுள்ளது. ஏழு கடல் மைல் வேகத்தில் இதில் பயணிக்கலாம். 14 கோடி ரூபாய் செலவில் ஏழு கேடமரன் படகுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய சூழலில் நிலவி வரும் சாலை நெரிசல், மாசுக்கட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், நீர் போக்குவரத்துக்கான அவசியம் தேவைப்படுகிறது. அதனை உணர்ந்து கேரள அரசு நீர் போக்குவரத்து மற்றும் நீர் வழியில் பயணிப்பதற்கான சூழலை உருவாக்கி வருகிறது. மோட்டார் வாகனங்களின் தேவைகள் அதிகரித்துள்ளதால் நீர் போக்குவரத்தின் தேவை குறைந்துள்ளது என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்திற்கு இணையாக நீர் வழி போக்குவரத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கோவளம் முதல் பெக்கால் வரையிலான நீர்வழிப்பாதையை மேம்படுத்துவதற்கு அரசு முன்னுரிமை அளித்துள்ளது. அதன்படி சரக்கு போக்குவரத்து, சுற்றுலா மற்றும் மாசு இல்லாத போக்குவரத்திற்கு கூடுதல் வசதிகள் விரைவில் திறக்கப்படும் என்று பினராயி விஜயன் கூறினார்.
இதையும் படிங்க:பிகாரில் பரப்புரையைத் தொடங்கவுள்ள ராகுல்!