பிகாரில் கந்தக் நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையினால் மேற்கு சாம்பாரன் மாவட்டத்தில் உள்ள வால்மிகிநகர் தடுப்பணையிலிருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்பட்டதால், வடக்கு பிகாரின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஆறுகள் ஆபத்து நிலையை அடைந்துள்ளதால் 4 லட்சம் மக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக பேரிடர் மேலாண்மை குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்
அந்த அறிக்கையில், "வால்மிகிநகர் தடுப்பணையிலிருந்து வெளியேறும் நீரின் அளவு 3.39 லட்சம் கியூசாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 4.28 லட்சம் கியூசாக அதிகரித்துள்ளது. இந்தத் திடீர் நீர் அதிகரிப்பானது நேபாளத்தின் காண்டக் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையினால் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இதே போல், லாரியா - நர்கதியகஞ்ச் சாலையில் மூன்று முதல் நான்கு அடி வரை வெள்ளப்பெருக்கு பாய்ந்தோடுகிறது. இதுவரை மூன்று பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். கந்தக் ஆற்றின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், தாழ்வான பகுதிகளில் உள்ள பல கிராமங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. அதே போல், அருகில் தாழ்வான பகுதிகளில் உள்ள கிராம மக்கள் வேறு இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.