உஜ்ஜைன் (மத்தியப் பிரதேசம்): உத்திரப் பிரதேச மாநிலத்தின் உள்ளூர் ரவுடி கும்பலின் தலைவனான விகாஸ் துபே மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூரின் உள்ளூர் ரவுடியான விகாஸ் துபே என்பவரை காவல் துறையினர் கைது செய்யசென்றனர். அப்போது, துபேவின் ஆட்கள் காவல் துறையினர் மீது நடத்திய தாக்குதலில் காவல் துறை துணை கண்காணிப்பாளர் உள்பட எட்டு காவலர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலைவெறித் தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் இரண்டு ரவுடிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதனிடையே, துபேவை கைது செய்ய காவல் துறையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். இச்சூழலில், துபேவின் சகோதரரான தீப் பிரகாஷ் வீட்டிற்கு சென்ற காவல் துறையினர், அவரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதுமட்டுமில்லாமல், பிரகாஷின் மனைவி, மகள் ஆகியோரும் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. துபேயின் தாயிடமும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரகாஷ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வந்தன.