குல்பூஷன் ஜாதவ் வழக்கில் மரண தண்டனைக்கு எதிராக சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய, அவருக்கு ஆதரவாக இந்தியாவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆஜராக வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "இவ்விவகாரம் குறித்து தூதரக ரீதியாக பாகிஸ்தான் நாட்டுடன் ஆலோசித்து வருகிறோம். சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்ப சுதந்திரமான நியாயமான விசாரணை மேற்கொள்ள வேண்டும். எனவே, ஜாதவுக்கு ஆதரவாக இந்திய வழக்கறிஞர் ஆஜராக வேண்டும்.
முக்கிய ஆவணங்களை சமர்பித்தல், ஜாதவுக்கு தூதரக உதவிகளை அளித்தல் உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளுக்கு பாகிஸ்தான் தீர்வளிப்பது முக்கியமான விஷயமாகப் பார்க்கப்படுகிறது" என்றார். ஆனால், ஜாதவ் சார்பாக பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர்களே ஆஜராவார்கள் என அந்நாடு தெரிவித்துள்ளது.
தூக்கு தண்டனைக்கு எதிரான சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய வழக்கறிஞரை நியமிப்பது குறித்து இந்தியாவுக்கு தெரியப்படுத்தக் கோரி, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் பாகிஸ்தான் அரசுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இது குறித்த வழக்கின் விசாரணை, செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்தியக் கடற்படை முன்னாள் அலுவலர் குல்பூஷன் ஜாதவ் (வயது 49), கடந்த 2016ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் அந்நாட்டு ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பாகிஸ்தானை உளவு பார்த்ததாகவும், பயங்கரவாத சதிச்செயலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அந்நிய நாட்டிற்காக பாகிஸ்தானை உளவு பார்த்ததாகக் கூறி அவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.