அண்மையில், இந்தியத் தொலைத் தொடர்புத் துறை (டாட்) இந்தியாவில் இயங்கும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் ஒரு கடிதத்தை அனுப்பி இருந்தது. அதில், உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஏஜிஆர் நிலுவைத் தொகை குறித்த விசாரணைக்கு முன்னதாக, நிலுவைத் தொகையைக் கட்டுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
இதற்குப் பதிலளித்த வோடபோன் இந்திய நிறுவனம் நிவாரணம் வழங்கப்படாவிட்டால், நிலுவைத் தொகையைக் கட்டுவது சிரமம் எனக் கூறியது.
மேலும், அந்நிறுவனம் இருப்புநிலைகளை மேம்படுத்தவும்; அதன் ஏஜிஆர் நிலுவைத் தொகையை செலுத்தவும் மொபைல் தரவு சுங்கவரி, அழைப்புக் கட்டணங்களை நிமிடத்திற்கு 6 பைசா உயர்த்த அனுமதி அளிக்க, கோரிக்கை விடுத்து டிராய் நிறுவனத்திற்குக் கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தது.
இது குறித்து ஊடகங்களைச் சந்தித்து பேசிய அதன் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, 'எனது வோடபோன் இந்தியாவில் நீண்ட காலம் தொடர்ந்து இயங்க விரும்புகிறது. ஆனால், அரசாங்க நிவாரணம் இல்லாமல் போனால் மூட நிர்பந்திக்கப்படுவதை எப்படி எதிர்கொள்ள முடியும்? தொலைத் தொடர்புத் துறையில் இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது' எனக் கூறினார்.
53,000 கோடி நிலுவைத் தொகையைக் கட்டவேண்டிய வோடபோன் சி.இ.ஓ நிதியமைச்சரைச் சந்தித்தார்! வோடபோன் ஐடியாவின் மதிப்பீட்டின்படி இந்திய அரசாங்கத்திற்கு அது கட்ட வேண்டிய ஏஜிஆர் தொகை 21,533 கோடி ரூபாய் மட்டுமே என நிலுவைத் தொகை கணக்கீடு, தொலைத் தொடர்புத் துறையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் அது கூறியுள்ளது. வோடபோன் நிறுவனமானது இதுவரை இரண்டு தவணைகளில் 3,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது.
இந்நிலையில், வரும் மார்ச் 17ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில், சரிப்படுத்தப்பட்ட மொத்த வருவாய் (ஏ.ஜி.ஆர்) குறித்து நடைபெற்று வந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணையையொட்டி, வோடபோன் தலைமை நிர்வாக அலுவலர் நிக் ரீட் இந்திய பயணம் மேற்கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வோடபோன் இந்தியா லிமிடெட் நிறுவனம் (வி.ஐ.எல்) இந்திய அரசாங்கத்திற்கு 53,000 கோடி ரூபாய் ஏஜிஆர் நிலுவைத் தொகை கட்டவேண்டியுள்ள சூழலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும், தொலைத் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தையும் சந்தித்திருப்பது கவனிக்கத்தக்கது. இந்தச் சந்திப்புகளின் போது வோடபோன் ஐடியா நிர்வாக மேலாளர் ரவீந்தர் தக்கரும் உடனிருந்தார்.
இதையும் படிங்க : மகாராஷ்டிரா தொழிற்சாலை விபத்தில் ஆறு பேர் உயிரிழப்பு!