விசாகப்பட்டினத்தில் கோபாலப்பட்டினம் ஆர்.ஜி. வெங்கடபுரம் கிராமத்தில் இயங்கிவரும் எல்ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையிலிருந்து 'பாலிவினைல் குளோரைடு' என்ற அபாயகரமான வாயு திடீரென கசிந்ததில் பெரும் ரசாயன விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தத் தொழிற்சாலையிலிருந்து கசிந்த அபாயகரமான ரசாயன வாயு சுமார் 3 கி.மீ. சுற்றளவிற்கு பரவியுள்ளது. உயிர் குடிக்கும் இந்த வேதிப்பொருளை சுவாசித்த அப்பகுதி பொதுமக்களுக்கு கண்கள், தோல் ஆகியவற்றில் எரிச்சல் ஏற்பட்டதுடன் பலர் மயக்கமடைந்துள்ளனர். இதை சுவாசித்த ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தால் கலக்கமடைந்துள்ளேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலர்களிடம் இதுகுறித்து கேட்டறிந்தேன். நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விசாகப்பட்டினம் மக்கள் நல்ல உடல்நிலையுடன் இருக்க பிரார்த்தனை மேற்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
ஆந்திர தலைமைச் செயலர், காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோருடன் மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டி ஆலோசனை நடத்தினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து விதமான உதவிகளையும் தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் செய்து தர வேண்டும் என கிஷன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: விசாகப்பட்டினம் விஷவாயுக் கசிவு: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுகிறது - குடியரசுத் தலைவர்