மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ஈடிவி பாரத்துக்கு காணொலி வாயிலாக சிறப்பு பேட்டியளித்தார். அப்போது 3-ஆவது முறையாக பொதுஅடைப்புக்கு பின்னர் மத்திய அரசின் நடவடிக்கை என்ன? கோவிட்-19 பெருந்தொற்று தடுப்பு மற்றும் மருத்துவர்களின் பிரச்னைகள் குறித்து விரிவாக பதிலளித்தார்.
ஈடிவி பாரத்துக்கு அளித்த காணொலி நேர்காணல் வருமாறு:-
1) கேள்வி : நாட்டில் பொது அடைப்பு 3-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பும் செயல்முறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசு, சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வியூகம் என்ன? இதனால் மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரிக்காதா?
பதில்: மத்திய சுகாதார அமைச்சகம் இது தொடர்பாக ஏற்கனவே செயல்முறைகளை வகுத்துள்ளது. சொந்த மாநிலங்களுக்கு சுமூகமாக மாணவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எவ்வாறு மாற்றப்பட வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களையும் நாங்கள் வழங்கியுள்ளோம்.
இது லட்சக்கணக்கான மனிதர்களின் இயக்கத்தை உள்ளடக்கியது. தற்போது, மாநிலங்கள் அனைத்து பலத்தையும் பிரயோகித்து சுகாதாரச் சூழலை சந்தித்துவருகின்றன. சட்ட விதிமுறைகள் மற்றும் துல்லியமான செயல்பாட்டால், இந்தச் சவாலை எதிர்கொள்ள முடியும்.
2) கேள்வி : நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களின் (PPE) பற்றாக்குறை குறித்து கவலை கொண்டுள்ளனர். இதன் விநியோகங்களை அதிகரிக்க மத்திய அமைச்சகத்தின் திட்டம் என்ன?
பதில்: கரோனா வைரஸ் தாக்கத்தின் ஆரம்பக் கட்டங்களில், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் பற்றாக்குறை இருந்தது. தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 100-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள், தினந்தோறும் மூன்று லட்சத்துக்கு அதிகமான தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த அனைத்து கருவிகளையும் மாநிலங்களுக்கு அளித்து வருகிறோம். இதனை ஒரு பிரச்னையாக நாங்கள் நினைக்கவில்லை.